’92 இழப்புகள்: சோரோஸ் மீது பழி; பேங்க் நெகாரா அதிகாரிக்குப் பணி உயர்வு

“பேங்க் நெகாராவுக்கு (அந்நிய செலாவணி வணிகத்தில்) ரிம5.7 பில்லியன் இழப்பு ஏற்பட்டபோது அதற்குக் காரணமான அதிகாரி பணி உயர்த்தப்பட்டு,  ஊக வணிகர் ஜார்ஜ் சோரோஸ் வில்லனாக்கப்பட்டு பழி போடப்பட்டது ஏன்?”

இக்கேள்வியை, இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது டிஏபி-பாகான் டத்தோ எம்பி லிம் குவான் எங், நிதி துணை அமைச்சர் டோனல்ட் லிம்மிடம் கேட்டார்.

தாசெக் குளுகோர் பிஎன் எம்பியான நோர் முகம்மட் யாக்கூப்பைச் சுட்டிக்காண்பித்து, சம்பந்தப்பட்ட அந்த முன்னாள் அதிகாரிமீது நடவடிக்கை எடுக்கப்படாமல் பணி உயர்வு கொடுக்கப்பட்டு இப்போது பிரதமர்துறை அமைச்சராக்கப்பட்டது ஏன் என்று அவர் வினவினார்.

முன்னதாக டோனல்ட், 1992-இல் பேங்க் நெகாரா மலேசியாவுக்கு(பிஎன்எம்) ரிம5.7பில்லியன் இழப்பு ஏற்பட்டதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.அது 1993 கணக்கறிக்கையில் குறிப்ப்பிடப்பட்டிருந்தது என்றாரவர்.

பேங்க் நெகாராவுக்கு ஏற்பட்ட இழப்புப் பற்றியும் அதற்குப் பொறுப்பானவர்கள் பற்றியும் குவான் எங் கேட்டிருந்த கேள்விக்குப் பதிலளித்தபோது டோனல்ட் அவ்வாறு கூறினார்.ஆனால்,அதற்குப் பொறுப்பானவர்கள் பற்றியோ அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாததற்கான காரணம் பற்றியோ எதுவும் கூறவில்லை.

பிஎன்எம் உயர் அதிகாரிகளின் அறிக்கைகளின்படி, சோரோஸ் ஆதாயம் தேடுவதற்காக குறிப்பிட்ட நாணயங்களை வைத்து நடத்திய ஊக வணிகம்தான் அதற்குக் காரணம் என்று தெரிவதாக அவர் சொன்னார்.

அவ்விவகாரம் பற்றி குவான் எங் மேலும் நெருக்கவே, அதிலிருந்து தப்பிக்கும் வகையில் அப்போது நிதி அமைச்சராக இருந்தவர் அன்வார் இப்ராகிம் என்றும் மேல்விவரங்களை அந்த பிகேஆர்-பெர்மாத்தாங் பாவ் எம்பியிடம் கேட்டறியுமாறும் கூறினார் டோனல்ட்.

அப்போது குறுக்கிட்ட பிஎன்-ரெம்பாவ் எம்பி கைரி ஜமாலுடின், குவான் எங்கின் கேள்வி “நண்பரைக் கொல்லும் கேள்வி” என்றார்.

1993 மக்களவைக் குறிப்புகளை மேற்கோள் காட்டிப் பேசிய கைரி, அந்த இழப்புகளுக்கு அன்வார்தான் “அமைச்சர் என்ற முறையில் பொறுப்பு” என்று குவான் எங்கின் தந்தை லிம் கிட் சியாங் குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டினார்.

பண்டிகார் அமின் மூலியா, அவ்விவகாரத்துக்கு பதில் அளிக்க அன்வாருக்கு அனுமதி அளிக்கவே அன்வார் பதிலளிக்க முனைந்தார்.அதை சில எம்பிகள் கிண்டல் செய்தனர்.அதைப் பொருட்படுத்தாமல் பேசிய அன்வார் பேங்க் நெகாரா ஊக வாணிகத்தில் ஈடுபடுவதை நிறுத்துமாறு தாம் பணித்ததாகக் கூறினார்.

“ஈப்போ தீமோர் உறுப்பினர் விளக்கம் பெறுவதற்காக அந்தக் கேள்வி கேட்டதில் தப்பில்லை.

“நிதி அமைச்சர் என்ற முறையில் நான் அதை ஒப்புக்கொண்டு அந்நிய செலாவணி(போரெக்ஸ்) வணிகம் அனைத்தையும் உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிட்டேன்”,என்றார்.

போரெக்ஸ் வணிகம் “1999-க்கு முன்னதாக” நடந்தது என்று கூறிய அன்வார், நோர் முகம்மட் அதில் ஈடுபடுவதற்கு அப்போது பிரதமராகவும் நிதி அமைச்சராகவும் இருந்தவர் அனுமதி அளித்திருந்ததாக அப்போதைய பேங்க் நெகாரா கவர்னர் காலஞ்சென்ற ஜாப்பார் உசேன் தெரிவித்தார் என்றார்.

“நோர் முகம்மட்டுடன் சேர்ந்து பதவி விலக ஜாப்பார் முன்வந்தார்.ஆனால், நான் சிறைக்கு அனுப்பப்பட்டதும் நோர் முகம்மட் அமைச்சராக பணி உயர்வு பெற்றார்”, என அன்வார் குறிப்பிட்டார்.