எஸ்யூபிபி சரவாக் பிஎன் -னிலிருந்து விலக வேண்டும் என உறுப்பினர்கள் கோரிக்கை- Dukau Papau

சரவாக் மாநில பிஎன் -னில் இருப்பதால் தொடர்ந்து ‘குறை கூறப்படுவதை’ நிறுத்துவதற்கு எஸ்யூபிபி என்ற சரவாக் ஐக்கிய மக்கள் கட்சி அந்தக் கூட்டணியிலிருந்து விலக வேண்டும் என அந்தக் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர்கள் அனைவரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அந்தக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் அவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டதாக கூறப்படுவதை உறுதி செய்ய மிகவும் சோகமாகவும் களைப்பாகவும் காணப்பட்ட கட்சித் தலைவர் பீட்டர் சின் மறுத்து விட்டார்.

“எந்தக் கருத்தும் இல்லை,” என்றார் அவர்.

அவருடைய தலைமைத்துவம் மிகவும் ‘பலவீனமாக’ இருப்பதாகவும் கடுமையாகக் குறை கூறப்பட்டது என்றும் சொல்லப்படுகின்றது. கட்சியின் சிபு கிளைக்கு தலைமை தாங்கும் வோங் சூன் கோ வழி நடத்தும் ‘புரட்சி’ பிரிவு சின் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்றும் குறை கூறப்பட்டது.

“நான் பலவீனமான தலைவர் என அவர்கள் சொல்லலாம். அது அவர்களுடைய எண்ணம்,” என சின் சொன்னார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கட்சித் தலைவராக சின் தேர்ந்தெடுக்கப்பட்டது முதல் முதலமைச்சர் அப்துல் தாயிப் மாஹ்முட் தலைமையில் இயங்கும் மாநில பிஎன், எஸ்யூபிபி கட்சியை “தவறாக நடத்துகிறது, அலட்சியம் செய்கிறது அல்லது ஒதுக்குகிறது என பெயர் தெரிவிக்க விரும்பாத மத்தியக் குழு உறுப்பினர்  ஒருவர் கூறிக் கொண்டார்.

எடுத்துக்காட்டுக்கு ஜார்ஜ் சான் தலைவராக இருந்த காலத்தில் சீனப் புத்தாண்டு நிகழ்வுகளில் தவறாமல் கலந்து கொண்டு வந்த தாயிப் இந்த ஆண்டு அந்த நிகழ்வுகளில் பங்கு கொள்ளவில்லை என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

Temenggong, Pemanca, Kapitan, அரசியல் செயலாளர்கள் போன்ற பதவிகளுக்கான நியமனங்களில் வோங்-கிற்கு முழு அனுமதியை தாயிப் வழங்கியுள்ளதாகவும் அந்த உறுப்பினர் கூறிக் கொண்டார்.

வோங் அந்த நியமனங்களை தமது கட்சிக்கு எடுத்துச் செல்வதில்லை என்றார் அவர்.

“தாயிப் வேண்டுமென்றே சின் -னைப் புறக்கணிக்கிறார். சின் சீனர்களைத் தளமாகக் கொண்ட கட்சி

ஒன்றின் தலைவர் என்பதோடு கூட்டரசு அமைச்சரும் ஆவார். என்றாலும் தாயிப் வோங்கிற்கு அதிக இடம் கொடுத்துள்ளார். வோங் கட்சித் தலைவராக இல்லாத போதும் சீன சமூகத்துடன் உறவு கொள்வதற்கு ‘அதிகாரத்தையும்’ தாயிப் அவருக்குக் கொடுத்துள்ளார்,” என்றும் அவர் சொன்னார்.

அந்த ‘புரட்சிக்காரர்களுக்கு’ எதிராக கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கத் தவறியதைத் தொடர்ந்து சில மத்தியக் குழு உறுப்பினர்கள் கூட்டத்திலிருந்து வெளி நடப்புச் செய்தார்கள். அந்தப் ‘புரட்சிக்காரர்களுக்கு’ எச்சரிக்கை மட்டுமே விடுக்கப்பட்டது.