பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம், தமக்குத் தெரிந்த ஒருவர் பக்காத்தான் ரக்யாட் குழு அவருடைய தனி விமானத்தைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதித்தார் என்றும் அதற்குக் கைம்மாறாக அவர் எதையும் எதிர்பார்க்கவில்லை என்றும் கூறினார்.
இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அன்வார், சாபா, சரவாக்கில் போக்குவரத்துச் சிரமத்தை எதிர்நோக்கியதால் “ஒரு நண்பர்” அவரது விமானத்தைக் கொடுத்துதவியதாகவும் அவரது அடையாளத்தை வெளியிடுவதற்கில்லை என்றும் கூறினார்.
“தம்மைப் பற்றி யாரும் விசாரித்தால் ‘ஒரு நண்பர்’ என்று மட்டுமே சொல்லுமாறு அவர் கேட்டுக்கொண்டார்…. நான் அவரிடம் கேட்டேன் பினாங்கு, சிலாங்கூர், கெடா அல்லது கிளந்தானில் நிலத்துக்கு விண்ணப்ப்பம் செய்திருக்கிறீர்களா என்று. அவர் இல்லை என்றார். எனவே, இது சலுகையுடன் தொடர்புகொண்டது என்ற பேச்சுக்கே இடமில்லை”.
ஜெட் விமானத்தின் உரிமையாளரைச் “சிறிது காலமாக”தமக்குத் தெரியும் என்றாரவர்.
“கோலாலம்பூரிலிருந்து லாபுவான், கோத்தா கினாபாலு, கூச்சிங் செல்லவும் பின்னர் அங்கிருந்து கோலாலம்பூருக்குத் திரும்பி வரவும் அதைப் பயன்படுத்தினோம்… முடிந்தால் திரும்பவும் பயன்படுத்திக்கொள்வேன்.
“அவர் உதவி செய்தார், அவ்வளவுதான்… என் கார் பழுதடைந்தால் மற்றவர்களின் காரை இரவல் வாங்குவதைப் போன்றதுதான் இது. சற்று நேரத்துக்குமுன்கூட இன்னொருவரின் ‘கோட்டை’ இரவல் வாங்கிப் பயன்படுத்தினேன்”, என்று குத்தலாகக் கூறினார்.
விமானம் மிகவும் உதவியாக இருந்தது என்று அன்வார் குறிப்பிட்டார். அன்று லாபுவானிலிருந்து கோத்தா கினாபாலுவுக்கு இணைப்பு விமானம் இல்லை, இரண்டு மணி நேரம் படகில்தான் செல்ல வேண்டும் ஆனால் அப்போது விமானம் இருந்தது பேருதவியாக அமைந்தது.
“அதில் என்ன ஊழல் இருக்கிறது? எதுவும் இல்லை. நீங்களே விசாரித்துப் பாருங்கள். அதனால்தான் (பத்து எம்பி) தியான் (சுவா) படமெடுத்தபோது அதை நான் தடுக்கவில்லை. ஏனென்றால் பிரச்னை எதுவுமில்லை”,என்றார்.
ஆனால், பிஎன் தொடர்பு ஊடகங்கள் “பக்காத்தானுக்கு உதவும் பெரிய நிறுவனங்களுக்கு அச்சம் ஊட்டும் நோக்கில்” இவ்விவகாரத்தைப் பெரிது படுத்திவிட்டதாக அவர் சொன்னார்.