மலேசிய இந்து சங்கம் கோயில்கள் சம்பந்தப்பட்ட தேசிய அளவிலான ஒரு பயிலரங்கை செப்டெம்பர் 1 இல் கோலாலம்பூர் செராஸ் டிபிகேஎல் மண்டபத்தில் நடத்தியது.
நிகழ்ச்சிக்கு முன்னதாக மண்டபத்தை அலங்கரிக்கும் ஏற்பாடுகள் நடந்தன. இந்திய பண்பாட்டிற்கொப்ப வாழை மரம் மற்றும் தோரங்கள் ஆகியவற்றோடு பதாதைகளும் கட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
பிரதமர் நஜிப் ரசாக் அப்பயிலரங்கில் உரையாற்றுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அலங்கார வேலைகள் நடந்து கொண்டிருக்கையில், ஆகஸ்ட் 30 இல் செராஸ் டிபிகேஎல் மண்டபத்திற்கு வந்த டிபிகேல் பணியாளர்கள் மண்டபத்தின் முன்வாயிலும் மண்டபத்திலும் வாழை மரம் மற்றும் தோரணங்கள் கட்டக்கூடாது என்று உத்தரவிட்டனர். உத்தரவிற்கேற்ப, இந்து சங்கத்தின் கோயில்கள் பற்றிய தேசிய பயிலரங்கு வாழை மரமும், தோரணங்களும் இல்லாமலே நடந்தேறியது.
மலேசிய இந்து சங்கம் ஏற்பாடு செய்திருந்த ஒரு தேசிய அளவிலான ஒரு நிகழ்வில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது குறித்து இந்து சங்கத்தின் சார்பில் எவ்விதத் தகவலும் வெளியிடப்படவில்லை. ஆனால், மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் செனட்டர் எஸ். இராமகிருஷ்ணன் இச்சம்பவம் குறித்து ஓர் அறிக்கையை வெளியிட்டார்.
வாழை மரம் மற்றும் தோரணங்கள் கட்டக் கூடாது என்று டிபிகேஎல் பணியாளர்கள் உத்தரவு இட்டிருந்ததை மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் மோகன் ஷாண் இன்று தொடர்பு கொண்ட போது உறுதிப்படுத்தினார்.
இச்சம்பவம் பற்றி உடனடியாக அறிக்கை விடாததற்கு தாம் வெளிநாடு சென்று விட்டதுதான் காரணம் என்று கூறிய மோகன் ஷாண், “இந்த உத்தரவை பிறப்பித்தவர்கள் டிபிகேஎல் பணியாளர்கள்தான், இயக்குனர் அல்ல. வாழை மரம் மற்றும் தோரணங்கள் கட்ட வேண்டுமென்றால் அதற்கான அனுமதியை முன்னதாகவே பெற வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்”, என்றார்.
வாழை மரமும் தோரணங்களும் இல்லாமலே பயிரலங்கு நடத்தப்பட வேண்டிய சூழ்நிலை இருந்தது. மாற்று இடம் கிடைப்பது சிரமமானதாக இருந்ததோடு இந்நிகழ்வில் கலந்துகொள்ள பங்கேற்பாளர்கள் நாடு தழுவிய அளவில் தயாராகி விட்டனர். “ஆனால், மண்டபத்தில் இரண்டு குத்துவிளக்குகள் இருந்தன. பதாதைகளும் கட்டப்பட்டிருந்தன”, என்று மோகன் ஷாண் மேலும் கூறினார்.
பிரதமர் நஜிப் ரசாக் கலந்துகொள்ள இயலாமல் போனதால், அவர் சார்பில் மனிதவள அமைச்சர் டாக்டர் எஸ். சுப்ரமணியம் பங்கேற்றார் என்று அவர் கூறினார்.
இச்சம்பவம் குறித்து மேல்நடவடிக்கையாக டிபிகேஎல் இயக்குனருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாக மோகன் ஷாண் தெரிவித்தார்.
“வருங்காலத்தில் ஒரே மலேசியாவில் இவ்வாறான சம்பவங்கள் இடம் பெறக்கூடாது. கலாச்சார மற்றும் சமய நிகழ்வுகளில் தடைகள் செய்யக்கூடாது”, என்றும் அவர் கூறினார்.
“அவர்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை”
கோயில்கள் பற்றிய பயிலரங்கு நிகழ்வில் வாழை மரம் மற்றும் தோரணம் கட்டக் கூடாது என்ற டிபிகேஎல்லின் உத்தரவினால் சினமுற்ற கந்தசாமி வேலாயுதன் இந்நாட்டின் தன்மை என்பதை அவர்கள் இன்னும் புரிந்துகொள்ளாமல் இருக்கின்றனர் என்றார்.
“இது ஒரு பல்லின, பல சமயங்களைக் கொண்ட நாடு என்பதை உணர்ந்துகொள்ளும் நிலைக்கு அவர்கள் இன்னும் வரவில்லை”, என்று மலேசிய இந்து சங்கத்தின் துணைத் தலைவரான வே. கந்தசாமி கூறினார்.
ஏன் வாழை மரம் மற்றும் தோரணம் கட்டக்கூடாது என்று கேட்டதற்கு, அதற்கான சட்டங்களும் விதிமுறைகளும் இருக்கின்றன என்று பதில் கிடைத்தது என்றாரவர்.
மேலும், “இந்து சமயம் குறித்த எந்த அடையாளங்களையும் அங்கு வைக்கக்கூடாது” (No signage of Hindu religion is allowed”), என்று கூறப்பட்டதாக கந்தசாமி தொடர்பு கொண்ட போது கூறினார்.
இந்த பயிலரங்கில் பிரதமர் நஜிப் ரசாக் பங்கேற்பதாக இருந்தது. ஒரே மலேசியா என்று கூறப்படுகிறது. அதன் கோட்பாட்டிற்கேற்ப “நாம் மற்ற சமய நடைமுறைகளை உணர்ந்து, ஏற்றுக்கொள்ளும் புரிந்துணர்வை அடைய வேண்டும். இது ஒரு வருத்தத்திற்குரிய சம்பவம்”, என்றாரவர்.
“ஒரே மலேசிய ஒரு சுலோகமாக மட்டும் இருக்கக் கூடாது. அது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்”, என்று கந்தசாமி மேலும் கூறினார்.