தயிப்மீதான ஊழல் விசாரணை “நடந்துகொண்டுதான் இருக்கிறது”

சரவாக் முதலமைச்சர் அப்துல் தயிப் முகம்மட், சட்டவிரோத வழிகளில் சொத்து சேர்த்தார் என்ற குற்றச்சாட்டு அளவுக்குமீறி அரசியலாக்கப்பட்டிருப்பதாகக் கூறும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்(எம்ஏசிசி), அவ்விவகாரம் மீதான விசாரணையில் எந்தக் குறுக்கீடும் கூடாது என்று கேட்டுக்கொண்டுள்ளது.

விசாரணை தொடர்வதை உறுதிப்படுத்திய எம்ஏசிசி தலைவர் அபு காசிம் முகம்மட்(வலம்) அவ்விவகாரம் “அளவுமீறி மிகைப்படுத்தப்பட்டிருக்கிறது” என்றார்.

“சொத்துச் சேகரிக்கப்பட்டது மீது இன்னும் தகவல்களைத்  திரட்டி  வருகிறோம் என்பதால் விசாரணை பற்றி நான் கருத்துரைக்க இயலாது”, என்று அபு காசிம் கூறினார்.

விசாரணை முடிய எவ்வளவு காலம் ஆகும் என்பதைக் கூறவும் அவரால் இயலவில்லை.

கடந்த வியாழக்கிழமை, சுவிட்சர்லாந்தில் தளத்தைக் கொண்டுள்ள புருனோ மன்செர் நிதியம், அந்த 76-வயது முதலமைச்சர்மீது 1981-இலிருந்தே விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் கூறியது.

அந்நிதியத்தின் அறிக்கை, தயிப் குடும்பத்தார் 20 பேரின் மொத்த சொத்துவளம் சுமார் யுஎஸ்$21பில்லியனாக (ரிம64பில்லியன்) இருக்கலாம் என்று கூறியது.தயிப்பின் சொத்துவளம் மட்டும் யுஎஸ்15பில்லியன் என்று அது மதிப்பட்டது.அது உண்மையானால் அவரே மலேசியாவின் மிகப் பெரிய பணக்காரர் ஆவார்.இப்போது மலேசியாவின் மிகப் பெரிய பணக்காரராகக் கருதப்படும் ரோபர்ட் குவொக்கின் சொத்து மதிப்பு யுஎஸ்12.5பில்லியன் மட்டுமே.

தோட்டத் தொழில், மூலப்பொருள் அமைச்சர் பெர்னார்ட் டொம்போக் ஐரோப்பிய ஆணையத்துக்கு வருகை மேற்கொண்டிருந்தபோது அந்த அறிக்கை ப்ரஸ்ஸல்சில் வெளியிடப்பட்டது.

தயிப் குடும்பத்தாரின் சொத்துகள் உலக முழுவதுமுள்ள 400 நிறுவனங்களில் பரவிக் கிடப்பதாக அவ்வறிக்கை கூறியது.அவர்களின் தலையாய நிறுவனமான சஹ்யா மாத்தா சரவாக்(Cahya Mata Sarawak)- சரவாக்கின் மிகப் பெரிய தனியார் நிறுவனம்- 2010-இல் ரிம2.4பில்லியன் பெறுமதியுள்ள சொத்துகளை வைத்திருந்தது என்று அது கூறியது.

கூச்சிங்கில் ரிம300மில்லியனில் மாநில சட்டமன்றம் கட்டும் பணி,மாநிலத்தில் 4,000கிலோ மீட்டர் நீள சாலைகளைப் பராமரிக்கும் பணி,சிமிண்ட் விநியோகம், கட்டுமானப் பொருள் விநியோகம் போன்ற  மாநிலத்தின் பெரிய குத்தகைப் பணிகள் அதற்குக் கொடுக்கப்பட்டன.

அக்குடும்பத்தாருக்கு கெனாங்கா முதலீட்டு வங்கி ஆர்எச்பி முதலீட்டு வங்கி ஆகியவற்றில் பங்குரிமை இருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

-த மலாய் மெயில்

 

TAGS: