அன்வார் இப்ராகிம் பயன்படுத்திக்கொள்ள ஜெட் விமானம் கொடுத்ததை மலாய் வணிகர் முகம்மட் தவிக் ஒமார் ஒப்புக்கொண்டார். ஆனால், அதற்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது போன்ற விவரங்களை வெளியிட அவர் தயாராக இல்லை.
டிஜெட்ஸ் சென்.பெர்ஹாட் தலைவரான தவிக், இன்றைய த ஸ்டார், உத்துசான் மலேசியா நாளேடுகளில் அந்த ஜெட் விமானம் தன்னுடையது என்று கூறப்பட்டிருப்பதை மறுத்தார்.
தம் நிறுவனம் அந்த ஜெட் விமானத்தைப் பராமரிக்கும் வேலையை மட்டுமே செய்து வருவதாக அவர் சொன்னார்.
“தனியார் ஜெட் விமானங்களைப் பராமரிப்பதுதான் எங்கள் வேலை”, என்றவர் த ஸ்டாரிடம் தெரிவித்தார்.
“அது தனியாருக்குச் சொந்தமான விமானம்.அப்படியே விட்டு விடுங்கள்”, என்றார்.
அவர்தான் விமானத்தின் உரிமையாளர் என்று கூறப்பட்டதை அவர் ஏற்கவில்லை.“நான் என்ன அவ்வளவு பெரிய பணக்காரனா? நானே cari makan செய்துகொண்டிருக்கிறேன் (அதை வைத்துப் பிழைப்பு நடத்துகிறேன்)”.
முகம்மட் தவிக், மலேசிய ஜூடோ சங்கத் தலைவர் என்பதுடன் எல்டி ஸ்போர்ட்ஸ் சென்.பெர்ஹாட், கினாங்கான் நீலம் சென்.பெர்ஹாட், ஆசியானா இன்ஸ்பிராசி சென்.பெர்ஹாட், கேஎன் கேப்பிடல் சென்.பெர்ஹாட், டி கோர்ப் லாபுவான் ஆகியவற்றின் தலைவராகவும் உள்ளார்.மேலும், அவர் ஹெல்த் சோல்யுசன்ஸ்(தன்கிழக்காசிய) சென். பெர்ஹாட், சிஎல்டிஎல் டவர் சென். பெர்ஹாட், அலிரான் மாடர்ன் சென்.பெர்ஹாட், வஸ்ஸெடி பெர்ஹாட் ஆகியவற்றின் இயக்குனருமாவார்.
நேற்று இந்த விமானம் பற்றி செய்தியாளர்கள் அன்வாரிடம் வினவியபோது சாபா, சரவாக் பயணத்துக்கு நண்பர் ஒருவர் அதைக் கொடுத்துதவியதாகக் கூறினார்.ஆனால், நண்பர் யார் என்பதை அவர் வெளியிடவில்லை.
இதனிடையே, உத்துசான் மலேசியா, விமானம் தொடர்பாக பிகேஆர் உதவித் தலைவர்கள் தியான் சுவாவும் நுருல் இஸ்ஸா அன்வாரும் டிவிட்டரில் வெளியிட்டிருக்கும் தகவல்கள் முரண்படுவதைக் கவனப்படுத்தியிருந்தது.
தியான் சுவா ஜெட் விமானம் வாடகைக்கு எடுக்கப்பட்டதாகவும் நுருல் இரவல் பெறப்பட்டது என்றும் கூறியிருப்பதாக அது தெரிவித்தது.