ஜோகூர் பெங்கெராங் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பெட்ரோல் ரசாயனத் தொழில் திட்டத்துக்கான எல்லா நடைமுறைகளும் முடிக்கப்படும் வரையில் அதன் கட்டுமானத்தை நிறுத்தி வைக்குமாறு கேட்டுக் கொள்வதற்காக அந்தப் பகுதியில் வாழும் கிராம மக்கள் பஸ் ஒன்றில் நான்கு மணி நேரம் பயணம் செய்து நாடாளுமன்றக் கட்டிடத்திற்குச் சென்றுள்ளனர்.
அந்தத் தொழில் திட்டம் பற்றிக் கேள்விப்படாத 20,000 கிராமவாசிகளுடன் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என அந்தக் கிராம மக்களுடைய பேராளரான அனிஸ் அபிடா முகமட் அஸ்லி கேட்டுக் கொண்டார்.
“கட்டுமானத்தை தற்காலிகமாக நிறுத்துங்கள், எல்லா நடைமுறைகளையும் முடியுங்கள், எங்கள் உரிமைகள் புறக்கணிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய குடியிருப்பாளர்களுடன் கலந்தாய்வு செய்யுங்கள். எல்லா வேலைகளையும் உடனடியாக நிறுத்துங்கள்,” என அவர் நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் கூறினார்.
60 பில்லியன் ரிங்கிட் செலவிலான அந்த பெட்ரோல் சுத்திகரிப்பு, பெட்ரோல் ரசாயன ஒருங்கிணைப்பு மேம்பாட்டுத் திட்டம் தங்களது சுற்றுச்சூழலையும் வாழ்வு ஆதாரத்தையும் பாதிக்கும் என்ற தங்களது கவலையைத் தெரிவிப்பதற்காக பெங்கெராங் வட்டார மக்கள் பல எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர்.