‘இளைஞர்களைக் கவருவதற்கு காங்னாம், கொலவெறி பாணியிலான பாடல்களை பயன்படுத்தலாம்’

இளைஞர்களைக் கவருவதற்கு ‘காங்னாம் பாணி’ (Gangnam style), ‘கொலவெறி’ பாணியிலான பாடல்களைப் போன்ற பிரபலமான கலாச்சார  அம்சங்களை அரசாங்கம் பயன்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என பிரதமர் துறை துணை அமைச்சர் எஸ்கே தேவமணி கூறியிருக்கிறார்.

“காங்னாம் பாணி”, “கொலவெறி” ஆகியவை நமது தேசிய கீதமான நெகாரா கூ-வைக் காட்டிலும் பிரபலமாகத் திகழ்கின்றன என்றார் அவர்.

“அதனால் தான் 1M4U என்னும் பாடல் புதுமையான இசையில் ( beat )அமைந்துள்ளது,” என்றார் தேவமணி.

அந்தப் புதுமையான இசை அரசாங்கம் நாட்டின் அக்கறைக்குரிய பல விஷயங்களிலிருந்து வெகு தொலைவில் உள்ள இளைஞர்களுடன் தொடர்பு கொள்ள உதவும் என்று அவர் நம்புகிறார்.

“இன்றைய இளைஞர்கள் உல்லாசத்தைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளனர். அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கும் பண்பாட்டைப் பின்பற்றுகின்றனர். மக்களுடன் அவர்களுக்கு உணர்வுப்பூர்வமாக தொடர்பு இல்லை,” என்றும் அவர் கூறிக் கொண்டார்.

ஆகவே அந்த இளைஞர்களுடன் தொடர்பு கொள்வதற்கு அரசாங்கம் அந்த முறைகளைப் பின்பற்ற வேண்டியுள்ளது என்றும் தேவமணி குறிப்பிட்டார்.

1M4U என்பது உத்தரவாதத்துடன் கூடிய வரம்புக்குட்பட்ட கார்ப்பரேஷன் என விளக்கிய அவர், ஒரே மலேசியா செய்தியை இளைஞர்களுக்குக் கொடுப்பதற்காக அது தோற்றுவிக்கப்பட்டது என்றார்.

அது உண்மையில் “ஒரே மலேசியா உங்களுக்காக” என்று சொல்கிறது.

என்றாலும் 1M4U இன்னும் புதியது என்றும் அது தனது நோக்கத்தில் வெற்றி கண்டுள்ளதா என்பதை இன்னும் தெளிவாக கணிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்

இளைஞர்களுடன் தொடர்பு கொள்வதற்கும் தலைமைத்துவத்திற்கும் இளைய தலைமுறையினருக்கும் இடையில் பாலம் அமைப்பதற்கும் அரசாங்கம் பெரிய நிகழ்வுகளையும் இணைய மேடைகளையும் பயன்படுத்தி வருகின்றது.

1M4U, அதனைச் சாதிப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள அண்மைய முயற்சி ஆகும்.