சரவாக்கில் காலடிவைக்க மேலும் ஒரு சமூக ஆர்வலருக்கு அனுமதி மறுப்பு

சமூக ஆர்வலரும் ஓவியரும் ‘டாட்டாரானை ஆக்கிரமிப்போம்’ இயக்கத்தைத் தோற்றுவித்தவருமான முகம்மட் பாஹ்மி ரேஸா முகம்மட் ஜரின் நேற்று சரவாக் சென்றபோது அங்கு அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அம்மாநிலம் தடைசெய்துள்ள சமூக ஆர்வலர்கள், அரசியல்வாதிகள் அடங்கிய நீண்ட பட்டியலில் அவரது பெயரும் இப்போது இன்னொரு பெயராக சேர்ந்துகொண்டிருக்கிறது.

நேற்று காலை மணி 9.15க்கு கோத்தா கினாபாலுவிலிருந்து கூச்சிங் விமான நிலையம் சென்றதாகவும் அங்கு தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் பாஹ்மி ரேஸா டிவிட்டரிலும் முகநூலிலும் பதிவிட்டிருக்கிறார்.

பின்னர் குடிநுழைவு அதிகாரி ஒருவர், அவரைத் தடைசெய்யும் உத்தரவு முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து வந்திருப்பதாகத் தெரிவித்தார்.2011,ஏப்ரல் 12-இலிருந்து அவரது பெயர் கறுப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது என்றும் அவரிடம் தெரிவிக்கப்பட்டது.

தடை செய்யப்பட்டதற்கான காரணம் தமக்குத் தெரியாது என்று கூறிய அந்த அதிகாரி அதைப் பற்றி அறிய வேண்டுமானால் மாநிலப் பாதுகாப்புத் துறையை அணுகுமாறு கேட்டுக்கொண்டார்.

மூன்று மணி நேரம் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட ஃபாஹ்மி ரேஸா, நண்பகல் 12மணிக்கு கோலாலம்பூருக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்.