‘திருத்தப்பட்ட வாடகை ஒப்பந்தம்’ எனக் கூறியதற்காக கெரக்கான் மீது முதலமச்சர் வழக்கு போடக் கூடும்

பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், ஜாலான் பின்ஹோர்னில் உள்ள தமது வீட்டுக்கான வாடகை ஒப்பந்தத்தை  தாம் திருத்தியுள்ளதாக கெரக்கான் கூறிக் கொண்டுள்ளது தொடர்பில் அதற்கு எதிராக வழக்குப் போடுவது பற்றி பரிசீலிக்கக் கூடும்.

பினாங்கில் நேற்று நிருபர்கள் கூட்டத்தில் மாநில கெரக்கான் இளைஞர் உதவித் தலைவர் தான் கா லியோங் அவ்வாறு குற்றம் சாட்டியுள்ளது மிகவும் கடுமையானது என லிம்-மின் அரசியல் செயலாளர் இங் வெய் எய்க் கூறினார்.

அந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களுக்காக தான் மீது ‘தொடர் நடவடிக்கை’ எடுக்கப்படும் என கொம்தார் சட்டமன்ற உறுப்பினருமான இங் சொன்னார்.

லிம் தமது முழு தளவாட வசதிகளைக் கொண்ட இரண்டு மாடி வீட்டுக்கான குத்தகை ஒப்பந்தத்தைத் திருத்தியுள்ளதாக கூறிக் கொண்டுள்ள மாநில பிஎன் தகவல் பிரிவுத் தலைவர் ஹங் கூன் லெங், நிபோங் தெபால் எம்பி தான் தீ பெங் ஆகியோருக்கு எதிராகவும் தொடர் நடவடிக்கை எடுக்கப்படும்.

மாநில கெரக்கான் இளைஞர் துனைத் தலைவருமான ஹங், லிம் “ஊழலானவர்” என்றும் சொன்னதாக கூறப்படுகின்றது.

“அந்த மூவரும் அடுத்த 24 மணி நேரத்துக்குள் தங்கள் கருத்துக்களை மீட்டுக் கொண்டு மன்னிப்புக் கேட்க வேண்டும்,” என இங் இன்று நிருபர்களிடம் சொன்னார்.

இங் பின்னர் முத்திரையிடப்பட்ட ஒப்பந்தத்தைக் காட்டினார். லிம்-மிடமோ மாநில அரசாங்கத்திடமோ மறைப்பதற்கு எதுவுமில்லை என்றார் அவர்.

அந்த வாடகை ஒப்பந்தம் மீது கெரக்கானுக்கு இன்னும் பிரச்னைகள் இருந்தால் அதன் தலைவர்கள் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடன் புகார் செய்யலாம் என்றும் அவர் யோசனை கூறினார்.

“நாங்கள் அந்த ஒப்பந்தத்தை விவரமாக விளக்கி விட்டோம். ஆனால் அவர்கள் அதனை செவிமடுக்க மறுக்கின்றனர்,” என்றார் இங்.

2009ம் ஜுன் மாதம் கையெழுத்தான அந்த வாடகை ஒப்பந்தத்தை கடந்த சனிக்கிழமை இங் வெளியிட்டார். மாதம் ஒன்றுக்கு 5,000 ரிங்கிட் வாடகையை லிம் அந்த வீட்டுக்குச் செலுத்தி வருகிறார்.

கடந்த ஜுன் மாதம் அந்த ஒப்பந்தம் காலாவதியாகி விட்டது என்றும் வீட்டு உரிமையாளர் அந்த வீட்டைச் சூழ்ந்துள்ள சர்ச்சை காரணமாக அதனை புதுப்பிப்பதை தாமதப்படுத்தியுள்ளார் என்றும் இங் தெரிவித்தார்.

“அவர் அதனை நீட்டிக்கா விட்டால் முதலைமைச்சருக்குப் பிரச்னைகள் ஏற்படும். அவர் தெருக்களில் தான் வசிக்க வேண்டியிருக்கும்,” என அவர் வேடிக்கையாகக் கூறினார்.

தாம் இன்று மேலும் தகவல்களை வெளியிட்டதைத் தொடர்ந்து பிஎன் தலைவர்கள் அந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பர் என்றும் இங் நம்பிக்கை தெரிவித்தார்.