சுவராம் அமைப்பிற்கு ஆதரவாக மெழுகுவர்த்தி மறியல்: மக்களின் குரல்தான் சுவராம் குரலாக ஒலிக்கிறது

“சுவராம் வாழ்க!”, “விசாரணையை அகற்று!” என்ற முழக்கங்கள் முழங்க சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட சமூக இயக்கங்களின் பிரதிநிதிகள் மெழுகுவர்த்தியுடன் கோலாலம்பூரின் சுற்றுலா மையமான மெர்டேக்கா சதுக்கத்தில் நேற்று மறியல் செய்தனர்.

நேற்றி இரவு எட்டு மணிக்கு தொடங்கிய இதில் இருபது இயக்கங்களின் பிரதிநிதிகள் சுவராமுக்கு ஆதரவு தெரிவித்ததோடு அரசாங்கம் சுவராமிற்கு எதிராக மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளைச் சாடினர்.

“மனித உரிமைக்காக போராடும் சுவராம் அமைப்பைப் பாதுகாக்க எங்களின் இந்த ஒருங்கிணைப்பு போராடும்” என்றார் இந்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்  யாப் ஹுவா.

‘விடுதலைக்கான வழக்கறிஞர்கள்’ என்ற இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் எட்மண்ட் போன், “நமது அரசமைப்பு மலேசியர்களுக்குக் கொடுத்துள்ள உரிமைகளைச் சுவராம் கடந்த 20 வருடங்களாக பாதுகாத்து வருகிறது” என்றார்.

இசா சட்டத்தில் 8 ஆண்டுகள் தடுப்பு காவலில் இருந்தவரும் சிறந்த அரசியல் எழுத்தாளருமான லீ பன் சென், “தேர்தலில் எப்படியும் வெற்றி பெற அரசாங்கத்தின் மீது குற்றங்களைச் சுமத்தும் பொது இயக்கங்களை வேட்டையாட தொடங்கியுள்ளனர். இதை நாம் அனைவரும் எதிர்த்து போராட வேண்டும்” என்றார்.

வருகை தந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த சுவராம் தலைவர் கா. ஆறுமுகம், அரசாங்கத்துடன் தாங்கள் முழுமையாக ஒத்துழைப்பதாகவும் ஆனால் அவர்கள் கட்டவிழ்த்து விட்டிருக்கும் நடவடிக்கைகளைச் சுவராம் குற்றம் சாட்டியுள்ள நிறுவனங்களான பரிமேக்கர் சென் பெர்காட் மற்றும் தெர் அசாசி சென் பெர்காட் மீது நடத்தினால் ஊழல் வெளிப்படும்; நாடும் நன்மை பெறும்” என்றார்.

உரிமை நீதி நியாயம் கேட்டும், அரசமைப்பில் உள்ள மனித உரிமைகள் மீது அரசாங்கம் மேற்கொள்ளும் அத்துமீறல்களையும்தான் சுவராம் கண்காணித்து,  தொகுத்து ஆண்டு அறிக்கையாக வெளியிட்டு அம்பலப்படுத்தி வருகிறது. இதன் வழி சுவராம்,  அரசாங்கம்  சர்வதிகாரமாக மாறுவதை உணரச் செய்கிறது. எங்களது அறிக்கைகள் அனைத்து அரசாங்க இலாகாகளுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் அனுப்பப்படுகின்றன என்றார் வழக்கறிஞருமான ஆறுமுகம்.

“நாட்டை சனநாயகமாக வழிநடத்த மக்கள் கோருவதைதான் நாங்கள் உரக்கமாகவும் ஆதாரப்பூர்வமாகவும் சொல்கிறோம்”.

TAGS: