சட்டத்துறைத் தலைவர்(ஏஜி) அப்துல் கனி பட்டேய்ல் தொழில் ரீதியாக தவறான நடந்துகொண்டார் என்று கூறப்பட்டிருப்பதன்மீது போலீசார் மேற்கொண்ட விசாரணை எந்த நிலையில் உள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள விரும்பிய செராஸ் எம்பி டான் கொக் வாய், அதன் தொடர்பில் நாடாளுமன்றத்தில் கேட்டிருந்த கேள்வியை மக்களவை தலைவர் பண்டிகார் அமின் மூலியா நிராகரித்தார்.
டிஏபி தேசிய உதவித் தலைவருமான டான், ‘Tan Sri Abdul Gani Patail Pemalsu, Penipu dan Penjenayah’என்னும் நூலின்மீது போலீசாரின் விசாரணை என்னவாயிற்று என்று கேள்வியொன்றைக் கேட்டிருந்தார்.
அதற்கு எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கப்பட்ட பதிலில், நிலை ஆணைகள் 23(1) (சி)-இன்கீழ் அவரது கேள்வி நிராகரிக்கப்படுவதாக நாடாளுமன்றச் செயலாளர் ரூஸ் ஹம்சா குறிப்பிட்டிருந்தார்.
வழக்குரைஞர் சைனல் அபிடின் அஹ்மட் எழுதி சுயமாகவே வெளியிட்ட அந்நூல் குறித்து மலேசிய ஊழல்-தடுப்பு ஆணைய ஆலோசனை வாரியத்தின் முன்னாள் உறுப்பினர் ரோபர்ட் பாங் கடந்த மாதம் போலீசில் புகார் செய்திருந்தார்.
அந்நூலில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு கனியும் போலீசும் பதில் சொல்ல வேண்டும் என்று கூறிய பாங், குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றால் எழுத்தாளர்மீது வழக்கு தொடுக்க அவர்கள் தயாரா என்றும் சவால் விடுத்திருந்தார்.
“பொதுவில் கொண்டுவரப்பட்டுள்ள இவ்விவகாரத்தை முக்கியமான ஒன்றாக ஏஜி கருத வேண்டும்.அவரால் அரசாங்கத்துக்குக் கெட்ட பெயர் வந்துவிடக்கூடாது”, என்றார்.
போலீஸ் புகாரை அடுத்து, இரண்டு மணி நேரம் விசாரிக்கப்பட்ட பாங், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் சீரமைப்புகளுக்கு கனி தடைக்கல்லாக இருக்கக்கூடாது என்று குறிப்பிட்டார்.