அந்நியச் செலாவணி வாணிக இழப்பு மீது நோர் முகமட் மௌனம்

1990ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் அந்நியச் செலாவணி வாணிகத்தில் பாங்கு நெகாரா மலேசியாவுக்கு ஏற்பட்ட 5.7 பில்லியன் ரிங்கிட் இழப்புக்கு தாம் பொறுப்பு எனக் கூறப்படுவது மீது கருத்துக் கூறுவதற்கு பிரதமர் துறை அமைச்சர் நோர் முகமட் யாக்கோப் மறுத்துள்ளார்.

தெராஜு எனப்படும் பூமிபுத்ரா திட்ட ஒருங்கிணைப்பு பிரிவு ஏற்பாடு செய்த நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் நிருபர்கள் அவரை சந்தித்தனர்.

தாம் வரும் வெள்ளிக் கிழமை தாக்கல் செய்யப்படவிருக்கும் 2013ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பற்றி மட்டுமே கருத்துரைக்கத் தயாராக இருப்பதாக தாசெக் குளுகோர் எம்பி-யுமான நோர் முகமட் சொன்னார்.

நாணய ஊக வணிகரான ஜார்ஜ் சோரோஸ் போக்கிரித்தனமான ஊக வணிகர் என குற்றம் சாட்டப்பட்ட வேளையில் 5.7 பில்லியன் ரிங்கிட் அந்நியச் செலாவணி வர்த்தக இழப்புக்கு பொறுப்பானவர் எனக் கூறப்படும் நோர் முகமட்-டுக்கு ஏன் பதவி உயர்வு கொடுக்கப்பட்டது என டிஏபி பாகான் எம்பி லிம் குவான் எங், நிதித் துணை அமைச்சர் டொனால்ட் லிம்-மிடம் நேற்று கேள்வி எழுப்பியிருந்தார்.

பாங்க் நெகாராவுக்கு அதன் 1993ம் ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது போல மொத்தம் 5.7 பில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டதாக டொனால்ட் மக்களவையில் தெரிவித்தார். அந்த மத்தியப் பொருளகம் தனது நாணய ஊக வாணிக நடவடிக்கைகளை 1992ல் நிறுத்திக் கொண்டது.

ஆனால் அவர் அந்த இழப்புக்குப் பொறுப்பானவர் யார் என்பதையும் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பதையும் தெரிவிக்கவில்லை.