பிகேஆர்: தனியார் ஜெட்டுக்குப் பணம் எதுவும் கொடுக்கவில்லை

கடந்த வாரம் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமும் கட்சித் தலைவர்களும் பயணம் செய்த தனியார் ஜெட் விமானத்துக்கு ஒரு காசுகூட  செலவு செய்யவில்லை என்று பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி அழுத்தந்திருத்தமாக வலியுறுத்தினார்.

இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அன்வாரின் கூற்றுக்கு முரண்பாடாக அறிக்கை வெளியிடுமுன்னர் பிகேஆர் உதவித் தலைவர் விவரங்களைச் சரிபார்த்திருக்க வேண்டும் என்றார்.

“அவர் அறிக்கை வெளியிடுமுன்னர் சரிபார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.அன்வார் சொன்னதை (ஜெட் விமானத்தை நண்பர் இரவல் கொடுத்தார் என்று சொன்னதை)க் கேட்டிருக்க வேண்டும்”, என்றாரவர்.

ஜெட் விமானத்தின் உரிமையாளர் பற்றி பிகேஆர் தகவல் தெரிவிக்க வேண்டியதில்லை, ஆர்வம் உள்ளவர்கள் சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் விவரங்களைக் கேட்டறியலாம் என்றார்.

“நீங்கள் (பிரதமரின் துணைவியார் ரோஸ்மா (மன்சூர்) அரசாங்கச் செலவில் பயணம் செய்வது எப்படி என்றோ; (உள்துறை அமைச்சர்) ஹிஷாமுடின் (உசேன்) வாராவாரம் கோலாலம்பூரிலிருந்து ஜோகூருக்கு ஹெலிகாப்டரில் பயணம் செய்கிறார், அதற்குப் பணம் கொடுப்பது யார் என்றோ கேட்பதில்லையே, ஏன்?”, என்றவர் வினவினார்.

இதனிடையே, பத்து எம்பியுமான சுவாவைக் கேட்டதற்கு தம் அறிக்கை அன்வாரின் அறிக்கையுடன் முரண்படவில்லை என்றார்.

“அந்த விமானத்தை நாங்களே முழுக்கப் பயன்படுத்திக்கொள்ள ஒப்பந்தம் செய்து கொண்டோம்.ஆனால் அதற்காக ஒரு காசுகூட கட்டணம் செலுத்தவில்லை”, என்றார்.

பிகேஆர் எதையும் மறைக்க நினைத்திருந்தால் ஜெட் விமானத்தின் படங்களை வெளியிட்டிருக்க மாட்டோம் என்றவர் சொன்னார்.

“இதிலிருந்து ஒன்றை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். முன்பு சாபா, சரவாக்கில் எங்களுக்கு தங்கும் விடுதிகளில் வாடகைக்கு அறைகூட கிடைக்காது.இப்போது மக்கள் எங்களுக்காக ஜெட் விமானங்களையே ஏற்பாடு செய்கிறார்கள்”, என்று சுவா கூறினார்.