சீனக் கல்வியைக் காப்பாற்றுவதற்கான பேரணியில் ஆயிரம் பேர் பங்கேற்பு

சீனக் கல்வி தொடர்பில் அரசாங்கம் பாரபட்சமான கொள்கைகளைப் பின்பற்றுவதாக கூறிக் கொண்டு அதன் மீது தங்கள் மனக் குறையைத் தெரிவிப்பதற்காக இன்று காலை நாடாளுமன்றக் கட்டிடத்துக்கு வெளியில் நடத்தப்பட்ட ஆட்சேபப் பேரணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மழையையும் பொருட்படுத்தாமல் கலந்து கொண்டனர்.

“926 சீனக் கல்வியை காப்பாற்றுவதற்கான ஆட்சேப நடவடிக்கை” எனப் பெயரிடப்பட்ட அந்தப் பேரணிக்கு செல்வாக்கு மிக்க சீனக் கல்விப் போராட்ட அமைப்பான டோங் ஜோங் ஏற்பாடு செய்திருந்தது.

நாடாளுமன்றக் கட்டிடத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாடாங் மெர்போக்கில் அந்தப் பேரணி நடைபெற்றது.

ஆர்ப்பாட்டக்காரர்களில் பெரும்பாலோர் வயதான சீனர்கள் ஆவர். அவர்கள் மழைக் கோட்டுக்களை அணிந்திருந்தனர் அல்லது குடைகளை வைத்திருந்தனர்.

சீனக் கல்வி எதிர்நோக்கும் பிரச்னைகளைத் தீர்க்குமாறு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைக் கேட்டுக் கொள்ளும் பல பதாதைகளையும் அவர்கள் ஏந்தியிருந்தனர்.

ஒற்றுமையே வலிமை என்னும் அர்த்தத்தைக் கொண்ட பிரபலமான சீன மொழிப் பாடல் ஒன்றையும் அவர்கள் பாடினர்.

பின்னர் டோங் ஜோங் தலைவர் யாப் சின் தியான் தலைமையில் 20 பேராளர்கள் பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸிடம் மகஜர் ஒன்றை சமர்பிப்பதற்குப் போலீசார் அனுமதி கொடுத்தனர்.

அந்த மகஜரின் பிரதிகளை பேராளர்கள் எம்பி-க்களிடமும் விநியோகம் செய்தார்கள்.