அந்நிய நிதி உதவிகள் நாட்டின் சட்டத்திற்கு இணங்க இருக்கும் வரையில் அதில் எந்தத் தவறும் இல்லை என மலேசிய வழக்குரைஞர்கள் மன்றம் கருதுகிறது.
“சிறப்புத் திட்டங்களுக்காக மலேசிய வழக்குரைஞர் மன்றத்திற்குக் கூட அந்நிய நிதிகள் பெறப்படுகின்றன. நாட்டின் சட்டங்கள் மீறப்படாத வரையில் வெளிநாடுகளிலிருந்து அரசாங்கங்களோ தனியார் அமைப்புக்களோ பணம் பெறுவதில் எந்தத் தவறும் இல்லை,” என அதன் தலைவர் லிம் சீ வீ கூறினார்.
சில தரப்புக்கள் அந்நிய நிதிகள் குறித்து ஐயப்பாடுகளை கிளப்புவதும் அவற்றின் நோக்கங்கள் பற்றிக் கேள்வி எழுப்புவதும் துரதிர்ஷ்டமானது என்றார் அவர்.
“அந்த நிதிகளைப் பெறுகின்ற அமைப்புக்கள் நிறுவனச் சட்டம், சங்கச் சட்டம் ஆகியவற்றைப் பின்பற்றுகின்றனவா என்பதே முக்கியம்.”
அரசாங்கத்தின் நிலைத்தன்மையைச் சீர்குலைக்கும் நோக்கத்துடன் பெர்சே, சுவாராம் உட்பட சில அமைப்புக்களுக்கு அந்நிய நிதிகள் கொடுக்கப்படுவதாக கூறிக் கொள்ளும் பத்திரிக்கைச் செய்திகள் பற்றி லிம் கருத்துரைத்தார்.
“இதனைக் கருத்தில் கொண்டு அண்மைய எதிர்காலத்தில் சிவில் சமூக அமைப்புக்கள் மீது ஒடுக்குமுறை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் நேற்று எச்சரித்திருந்ததை நிராகரிக்க முடியாது.”
அந்நிய நிதி உதவிகளைக் கட்டுப்படுத்தும் சட்டம் ஏதுமில்லை என்றும் கூறிய லிம் அத்தகைய சட்டத்தை தாம் எதிர்ப்பதாகவும் சொன்னார்.
“மக்கள் அது போன்ற சட்டத்தை விரும்ப மாட்டார்கள் என நான் எண்ணுகிறேன்.”
அந்நிய நிதியைப் பெறும் யாரும் அதனை அறிவிக்க வேண்டும் என அண்மையில் ரஷ்யா சட்டம் ஒன்றை நிறைவேற்றியது எனத் தெரிவித்த வழக்குரைஞர் மன்றத் தலைவர் “நாங்கள் அந்தப் பாதையில் செல்ல விரும்பவில்லை,” என்றார்.
அரசாங்கம் சிவில் சமூக அமைப்புக்களுக்கு ஊக்கமூட்ட வேண்டும்
அரசாங்கம் சிவில் சமூக அமைப்புக்களின் வளர்ச்சிக்கு ஊக்கமூட்ட வேண்டுமே தவிர அவற்றை ஒடுக்கக் கூடாது என்றும் லிம் வலியுறுத்தினார்.
“அந்த சிவில் சமூக அமைப்புக்கள் சட்டத்துக்கு இணங்க இயங்கும் வரையில் அவை ஒடுக்கப்படுவதையும் அவற்றின் மீது வழக்குப் போடப்படுவதையும் காண நாங்கள் நிச்சயம் விரும்பவில்லை.”
இப்போதைக்கு சுவாராமை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். அதன் மீது இன்னும் எந்தக் குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை.
அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை ஒரு வகையான ஒடுக்குமுறை என்னும் தோற்றத்தை அளித்திருப்பது துரதிர்ஷ்டமாகும். அந்த அத்தியாயம் முடிவுக்கு வரும் என நான் நம்புகிறேன்,” என்றும் லிம் குறிப்பிட்டார்.
சுவாராம் மீது குற்றம் சாட்டப்படும் என உள்நாட்டு வாணிக, கூட்டுறவு, பயனீட்டாளர் விவகார அமைச்சர் இஸ்மாயில் சாப்ரி கூறியிருப்பது நிர்வாகத்தில் தலையிடுவதாகக் கருதப்பட முடியுமா என லிம்-மிடம் கேட்கப்பட்டது.
அதற்கு சுருக்கமாகப் பதில் அளித்த அவர், வழக்குத் தொடருவதற்கான அதிகாரம் சட்டத்துறைத் தலைவரிடம் இருப்பதாக தாம் கடைசியாக கூட்டரசு அரசமைப்பில் பார்த்ததாகச் சொன்னார்.
சுவாராம் மீது இந்த வாரம் குற்றம் சாட்டப்படும் என கடந்த வாரம் இஸ்மாயில் கோடி காட்டியிருந்தார்.
ஆனால் மலேசிய நிறுவன ஆணையம் அனுப்பிய விசாரணை அறிக்கைகளை மேலும் புலனாய்வுக்காக சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் திருப்பி அனுப்பி விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.