உத்தேச தேசிய ஒற்றுமைச் சட்டம் உட்பட சட்டங்களை இயற்றும் போது பிரதமரும் அமைச்சரவையும் திறந்த மனதுடன் இயங்குவர் என மலேசிய வழக்குரைஞர்கள் மன்றம் நம்புகின்றது.
அந்த தேசிய ஒற்றுமைச் சட்டம் தேச நிந்தனைச் சட்டத்துக்கு பதிலாக அறிமுகம் செய்யப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
“நீங்கள் ஒற்றுமையையும் விசுவாசத்தையும் சட்டத்தின் மூலமோ அல்லது கட்டாயத்தின் மூலமோ கொண்டு வர முடியாது” என்பதைச் சுட்டிக்காட்டிய அதன் தலைவர் லிம் சீ வீ, “அது வளர்க்கப்பட்டு ஊக்கமூட்டப்பட வேண்டும்,” என்றார்.
அவர் எடுத்துக்காட்டுக்கு பிரிட்டனின் சம நிலைச் சட்டத்தைக் குறிப்பிட்டார். அது செக்ஸ், பால், வயது, வெறுப்பு உரைகள் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படக் கூடாது எனச் சொல்வதாக அவர் சொன்னார்.
“தேச நிந்தனைச் சட்டத்துக்கு பதில் புதிய சட்டத்தை வரையும் போது அரசாங்கம் பல விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கும் என்பது எனக்குத் தெரியும் தேசிய ஒற்றுமைச் சட்டத்தை வரையும் போது சட்டத்துறைத் தலைவர் அலுவலகம், மனித உரிமைகள் ஆணையம், வழக்குரைஞர்கள் மன்றம் ஆகியவற்றுக்கு இடையில் கலந்தாய்வு நடத்தப்படும் என நாங்கள் நம்புகிறோம்,” என கருத்துரைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட போது லிம் சொன்னார்.
“இது வரை அதன் நகல் தயாராகவில்லை. கலந்தாய்வு நடத்தப்படுவதற்கு நாங்கள் அழைக்கப்படவில்லை. முழுமையான சட்டம் என ஏதுமில்லை என்றாலும் அதனைத் தாக்கல் செய்வதற்கு முன்னர் முறையான அரசியல் விவாதங்களும் கலந்தாய்வுகளும் நடத்தப்பட வேண்டிய அவசியம் உள்ளது.”
அமைதியாக ஒன்று கூடும் சட்டத்தையும் ஆதாரச் சட்டத்தில் 114ஏ பிரிவு சேர்க்கப்பட்டதையும் வழக்குரைஞர் மன்றம் ஏற்கனவே வன்மையாக ஆட்சேபித்துள்ளது. அவை இரண்டும் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும் அது கோரியுள்ளது.