ஸாகிர் நாய்க்கு எதிராக கிள்ளான் காவல்துறை தலைமையகத்தில் புகார்

இந்து மதத்தை இழிவுபடுத்தி பேசிவரும் இஸ்லாம் மதபோதகர் ஸாகிர் நாய்க்கு எதிராக கிள்ளான் காவல்துறை தலைமையகத்தில் நேற்று புகார் செய்யப்பட்டது.

மலேசியா வந்துள்ள இந்திய நாட்டு இஸ்லாம் மதபோதகர் தமது பிரச்சாரங்களை நடத்துவதற்கு உள்துறை அமைச்சு உடனடியாக தடைவிதிக்கவேண்டும் எனக் கோரி கிள்ளான் வட்டாரத்தில் இயங்கும் அரசு சார பொது இயக்கங்கள் நேற்று காவல்துறையில் புகார் செய்தன.

மலேசியா ஒரு பல்லின நாடு மக்களிடையே இருந்து வரும் நல்லுறவுக்கு பங்கம் ஏற்படும் வகையில் ஸாகிரின் உரை இருக்கலாம் என்பதால் அவரை உடனடியாக மலேசிய அரசு வெளியேற்றவேண்டும் என சிலாங்கூர் நடவடிக்கை குழுவின் தலைவர் எல். சேகரன் கேட்டுக் கொண்டார்.

நேற்று மாலை 6 மணிக்கு  கிள்ளான் காவல்துறை தலைமையகத்தில் புகார் செய்ய வந்த பல சமூக இயக்கங்களின் 40-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் அங்கு பணியில் இருந்த காவல்துறையினரின் மெத்தனப்போக்கால் இரவு மணி 9 வரை காத்திருக்க நேர்ந்ததாகவும் புகார் செய்ய வந்தவர்களில் 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர் எனவும் சேகரன் செம்பருத்தியிடம் தெரிவித்தார்.

இதனிடையே, இன்று நாடாளுமன்றத்தில் இந்திய அரசு சாரா இயக்கங்களின் தலைவர்கள் ஒன்றுதிரண்டு ஸாகிர் நாய்க்கு எதிரான ஆட்சேப மனு ஒன்றை பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரியிடம் வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.