‘அரசாங்கம் கட்டுப்பாடு இல்லாமல் செலவு செய்ய முடியாது’

‘அன்பளிப்புக்கள்’ அடிப்படை வசதித் திட்டங்கள் ஆகியவற்றினால் உந்தப்பட்ட நாட்டின் வளர்ச்சி மலேசியர்களுக்கு நல்ல செய்தி அல்ல. காரணம் அது அரசாங்கக் கடனை அதிகரிக்கிறது என கோலா சிலாங்கூர் எம்பி சுல்கெப்லி அகமட் கூறுகிறார்.

எல்லாவற்றுக்கும் மேல் இப்போது அரசாங்கக் கடன் அளவு 477 பில்லியன் ரிங்கிட்டாக உள்ளது. ( அது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 53 விழுக்காடு ஆகும். கடன் உச்ச வரம்பு 55 விழுக்காடு ஆகும்) அத்துடன் அரசாங்கச் சார்பு நிறுவனங்கள், அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள் ஆகியவற்றின் கடன்களாக அரசாங்கம் 116 பில்லியன் ரிங்கிட்டுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

அதே வேளையில் வருமான இடைவெளியும் அதிகரித்து வருவதும் எண்ணெய் எரிவாயு வருமானத்தை அதிகம் சார்ந்திருப்பதும் கட்டுப்பாடு இல்லாத செலவுகளை அனுமதிக்காது என சுல்கெப்லி சொன்னார்.

அவர் பாஸ் கட்சியின் ஆய்வு மய்யத் தலைவரும் ஆவார்.

“தேர்தல்கள் நெருங்கி வந்தாலும் தான் விரும்புவதைப் போல அரசாங்கம் அன்பளிப்புக்களையும் மானியங்களையும் அள்ளி வீச முடியாது.”

“நிச்சயம் அது இரு தரப்புக்கும் பொருந்தும். பக்காத்தான் ராக்யாட்டும் அதனைச் செய்ய முடியாது,” என அவர் அந்த எதிர்த்தரப்புக் கூட்டணியின் மாற்று வரவு செலவுத் திட்ட விவரங்களை வெளியிட்ட போது கூறினார்.

அந்த மாற்று வரவு செலவுத் திட்டம் 5.2 விழுக்காடு வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதே வேளையில் வரவு செலவுப் பற்றாக்குறையையும் 3.5 விழுக்காடு குறைக்கிறது.

அரசாங்கம் நாளை மாலை 4 மணிக்கு அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்பிக்கிறது.

பிஎஸ்எம் என்ற மலேசிய சோஷலிசக் கட்சி ஏற்பாடு செய்துள்ள வரவு செலவுத்  திட்டத்துக்கு முந்திய கருத்தரங்குப் பேச்சாளர்களில் ஒருவராக சுல்கெப்லி பேசினார்.

வழக்கமாக பொருளாதார ஏற்றமும் இறக்கமும் 10 ஆண்டு கால வட்டமாகும். ஆனால் மலேசியா கடந்த 14 ஆண்டுகளாக வரவு செலவுப் பற்றாக்குறையை பதிவு செய்து வருகிறது. உண்மையில் அது மிகவும் ‘வினோதமாக’ இருப்பதாக அவர் வருணித்தார்.

“”நாம் ஏற்றத்தையும் இறக்கத்தையும் பார்த்துள்ளோம். மற்ற நாடுகள் இந்தோனேசியா, தாய்லாந்து, ஆஸ்திரேலியா கூட நல்ல நேரத்தை பெற்றுள்ளன. அவை சமநிலையான வரவு செலவுத் திட்டத்தை அறிவித்துள்ளதோடு உபரியையும் வைத்துள்ளன..”

“நாம் அனைவரும் தேர்வு செய்துள்ள மேம்பாட்டு நிதி ஒழுங்கு முறையில் (நாம்) எவ்வளவு கவனக்குறைவாகவும் உறுதியற்றவர்களாகவும் இருப்பதை அது காட்டுகின்றது,” என்றார் அவர்.