சமாதானத்துக்கான நோபல் பரிசை பெற்ற முதல் ஆப்பிரிக்க பெண்மணியான வங்காரி மத்தாய் புற்று நோய் காரணமாக மரணமடைந்துள்ளார்.
அவருக்கு வயது 71. கென்ய நாட்டின் தலைநகர் நைரோபியில் உள்ள மருத்துவமனையில் புற்று நோய்க்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் அவர் காலமானார்.
சூழல் மற்றும் மனித உரிமைகள் விடயம் தொடர்பாக செயலாற்றி வந்த அவருக்கு 2004-ம் ஆண்டு சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கபப்பட்டது.
பெண்களை ஒருங்கிணைத்து, காடுகளை அழிப்பதற்கு எதிரான போராட்டத்தை அவர் முன்னெடுத்து வந்தார். அதே போல அநீதிக்கு எதிராகவும் ஊழலுக்கு எதிராகவும் அவர் அதிகாரிகளுடன் தொடர்ந்து மோதி வந்தார்.
ஆப்பிரிக்காவின் மிகச்சிறந்த மனிதர்களில் ஒருவர் வங்காரி மத்தாய் என கென்ய அரசின் சார்பில் பேசிய அதன் துணை அதிபர் கேலொன்சான் முஸ்யோகா, அவரது நினைவாக மரங்களை நடுமாறு வேண்டியுள்ளார்.
மரங்கள் பெண்களுக்கு உதவும்
மரங்களை நடும் போது, அமைதி மற்றும் நம்பிக்கைக்கான விதைகளை நாம் நடுகிறோம் என்று வங்காரி மத்தாய் 2004-ம் ஆண்டு நோபல் விருதைப் பெற்ற பிறகு ஆற்றிய உரையில் தெரிவித்திருந்தார்.
சீரழிந்து வரும் சமூக மற்றும் சுற்றுச்சூழலில், ஏழ்மையிலும் துன்பத்திலும் இருக்கும் பெண்களுக்கு மரங்கள் பெரும் உதவியாக இருக்கும் எனவும் வங்காரி மத்தாய் அப்போது தெரிவித்தார்.
இதன் மூலம் அவர்களுக்கு தேவையான நீர், விறகு மற்றும் உணவு போன்றவை போதிய அளவுக்கு கிடைக்கும் எனவும் அவர் கூறியிருந்தார்.
கென்ய அரசின் காடுகளை அழிக்கும் திட்டத்துக்கு எதிராக, 1977-ம் ஆண்டு கென்யாவில் கிரீன் பெல்ட் மூவ்மெண்ட் எனப்படும் பசுமை இயக்கத்தை தொடங்கிய அவர் 47 மில்லியன் மரங்களை நட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.