இவ்வாண்டு நவம்பரில் மின் கட்டணம் உயருமா?
இக்கேள்வி, இன்று காலை 4வது தேசிய எரிபொருள் கருத்தரங்கைத் தொடக்கிவைத்த எரிபொருள்,பசுமைத் தொழில்நுட்ப, நீர்வள அமைச்சர் பீட்டர் சின்னிடம் கேட்கப்பட்டது.
ஆனால், சின் அக்கேள்விக்குப் பதில் அளிக்கவில்லை.பொதுத் தேர்தல் எந்த நேரத்திலும் அறிவிக்கப்படும் நிலை இருப்பதால் அதற்குப் பதிலளிப்பது நல்லதல்ல என்று அவர் நினைத்திருக்கலாம்.
அதனால் அவர் சாமர்த்தியமாக,“இந்தக் கேள்விக்குத்தான் நானும் விடை தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.அதை அமைச்சரவைதான் முடிவு செய்ய வேண்டும்.ஆனால்,அது இன்னும் முடிவு செய்யவில்லை”,என்றார்.
மின்கட்டணம் கடைசியாகக் கடந்த ஆண்டு ஜூன் மாதம் மாற்றி அமைக்கப்பட்டதாகக் கூறிய சின், அதன்பின் மின்கட்டண உயர்வுக்காக விடுக்கப்பட்ட கோரிக்கைகளை அரசாங்கம் புறந்தள்ளியதாகக் கூறினார்.
“மாற்ற வேண்டியதுதான்.ஆனால், அரசாங்கம் முடியாது என்று சொல்லி விட்டது”, என்றார்.
பொருளாதார மன்றத்திடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது
அவ்விவகாரம் தொடர்பில் அமைச்சு தேசிய பொருளாதார மன்றத்திடம் அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்திருப்பதாக சின் கூறினார்.ஆனால், அதை விவரிக்கவில்லை.
அமைச்சு எத்தனை விழுக்காடு கட்டண உயர்வைக் கோரியுள்ளது என்று செய்தியாளர்கள் வினவியதற்கு,“அதைத் தெரிவிக்க இயலாது”,என்றார்.