குலசேகரன்: ஸகீர் நாயிக் மலேசிய வருகையைத் தடை செய்ய வேண்டும்

இந்தியாவை சேர்ந்த சர்ச்சைக்குரிய இசுலாமிய போதகர் ஸகீர் நாயிக் மலேசியாவில் பல்வேறு கருத்தரங்குகளில் செப்டெம்பர் 28 லிருந்து அக்டோபர் 7 வரையில் பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் கோலாலம்பூர் பிடபுள்யுடிசியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள  நிகழ்ச்சியும் அடங்கும்.

டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன் அந்த இசுலாமிய மத போதகர் ஸகீர் நாயிக் மலேசியாவிற்குள் நுழைவதற்கு தடை விதிக்குமாறு உள்துறை அமைச்சர் ஹிசாமுடினை கேட்டுக்கொண்டுள்ளார்.

“ஸகீர் நாயிக் இதர மதங்கள் குறித்து ஏற்றுக்கொள்ள முடியாத, விவேகமற்ற கருத்துகளைத் தெரிவித்திருப்பவர் என்று அறியப்பட்டுள்ளார்”, என்று குலசேகரன் இன்று விடுத்த ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.

ஜூன் மாதம் 2010 ஆண்டில் நாயிக் பிரிட்டன் மற்றும் கனடா ஆகிய நாடுகளில்  நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதை குலா சுட்டிக் காட்டினார்.

” கனடிய முஸ்லிம் காங்கிரஸ் நிறுவனர் தாரெக் ஃபாட்டா கனடிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாயிக்கின் கருத்துகள் குறித்து எச்சரிக்கை விடுத்த பின்னர் நாயிக் கனடாவுக்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது”, என்று குலசேகரன் கூறினார்.

தாரெக் ஃபாட்டா கூறியதாக ஜூன் 22, 2012 இல் வெளியிடப்பட்ட கீழ்க்காணும் செய்தி அறிக்கையை குலா குறிப்பிட்டார்:

“அரசாங்கத்துறைகள் அவரின் (நாயிக்கின்) அறிக்கைகள் குறித்து தெரிந்து கொண்ட பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டது குறித்து நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்”, என்று கூறிய திரு ஃபாட்டா, தாம் டாக்டர் நாயிக்கின் கருத்து குறித்து எச்சரிக்கும்  மின்னஞ்சல்களை பெருமளவில் கடந்த வாரம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு  அனுப்பியதாகவும் தெரிவித்தார். ‘நாங்கள் நிச்சயமாக வெறுப்புணர்வைப் பரப்பும் விஷமிகள் இங்கு வருவதை விரும்பவில்லை’, என்றாரவர்.

நாயிக்கின் கருத்துகள் இந்து சமூகத்தின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளது என்பதைச் சுட்டிக் காட்டிய குலசேகரன், “மலேசிய அரசாங்கம் அவர் மலேசியா வருவதற்கு விசா அளித்துள்ளது குறித்து நான் அதிர்ச்சி அடைந்துள்ளேன்”, என்று மேலும் கூறினார்.

“மலேசியாவின் பல்வேறு சமூகங்களின் உணர்வுகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதோடு அவரை இந்நாட்டில் பேசுவதற்கு அனுமதிக்கக் கூடாது என்று  நான் அரசுத்துறையினரை வலியுறுத்துகிறேன்”, என்றார் குலசேகரன்.