‘முஸ்லிம் எதிர்ப்பு திரைப்படத் தயாரிப்பாளர்’ அமெரிக்காவில் தடுத்துவைக்கப்பட்டார்

முஸ்லிம் நாடுகளில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை ஏற்படுத்தி விட்ட வீடியோ திரைப்படத்தை தயாரித்ததாகக் கூறப்படும் நபர் நேற்று அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு ஜாமீன் வழங்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டார்.

அவர் நாட்டை விட்டு தப்பி விடக் கூடும் என்ற அஞ்சுவதால் அவருக்கு ஜாமீன் கொடுக்கவில்லை என நீதிபதி கூறினார்.

Innocence of Muslims’ என்னும் வீடியோ திரைப்படத்தின் இயக்குநர்/தயாரிப்பாளர் எனக் கூறப்பட்டுள்ள Nakoula Basseley Nakoula 2010ம் ஆண்டு வங்கி மோசடி குற்றச்சாட்டு ஒன்றுக்காக வழங்கப்பட்ட நன்னடத்தை விதிமுறைகளை மீறியதற்காக கைது செய்யப்பட்ட பின்னர் அவர் லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றம் ஒன்றில் நிறுத்தப்பட்டார்.
 
நன்னடத்தை அதிகாரிகளிடம் தவறான வாக்குமூலங்களை கொடுத்தது, மூன்று வெவ்வேறு பெயர்களைப் பயன்படுத்தியது ஆகியவை உட்பட  55 வயதான Nakoula  எட்டு விதிகளை மீறியுள்ளதாக அரசு தரப்பு வழக்குரைஞர் ரோபர்ட் டுகாடேல் கூறினார்.

அந்தத் திரைப் படத்தின் மீது ஆர்ப்பாட்டங்கள் தொடங்கிய பின்னர் தலைமறைவாகி விட்ட Nakoula -வுக்கு ஜாமீன் கொடுக்கப்பட மாட்டாது என நீதிபதி சுஸான் செகால் அறிவித்தார். காரணம் அவர் சமூகத்திற்கு ஆபத்தானவர். அவர் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லக் கூடிய சாத்தியமும் உள்ளது என்றார் நீதிபதி.

“பிரதிவாதி மீது நீதிமன்றத்துக்கு நம்பிக்கை இல்லை,” என்றார் நீதிபதி.

Nakoula-வின் வீடியோ முஸ்லிம்களிடையே ஆத்திரத்தை மூட்டி விட்டதைத் தொடர்ந்து அவரது பாதுகாப்பு பற்றி அச்சம் தெரிவிக்கப்பட்டிருந்தது. நீதிமன்றத்துக்கு அவர் கடுமையான பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டார்.

பொது மக்கள் நீதிமன்றத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. நிருபர்கள் வேறு ஒரு கட்டிடத்தில் இருந்து கொண்டு நேரடி வீடியோ ஒளிபரப்பு மூலம் நீதிமன்ற நடவடிக்கைகளைப் பார்த்தனர்.

Sam Bacile என்னும் புனை பெயரைக் கொண்ட அவருடைய உண்மையான அடையாளம் Nakoula ஆகும். அவர் ‘Innocence of Muslims’ திரைப்படத்தின் இயக்குநர் என குறிக்கப்பட்டுள்ளது.

நன்னடத்தை அதிகாரிகள் அவரை இம்மாதத் தொடக்கத்தில் விசாரணைக்காக தடுத்து வைத்தனர்.

ஏஎப்பி