2013 பட்ஜெட் உரையிலிருந்து ஒன்று தெரிகிறது. தேர்தலைப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அடுத்த ஆண்டு மார்ச் வரை தள்ளிப்போட முடிவு செய்திருக்கிறார்.
இன்னொரு பற்றாக்குறை பட்ஜெட்தான் என்ற போதிலும் நஜிப்பின் நிர்வாகம், தனக்கு உதவக்கூடியவர்கள் என்று பெரிதும் நம்பும் குறைந்த-வருமானம் ஈட்டும் தரப்பினருக்கு ரொக்க அன்பளிப்புகளை வாரி வழங்கியுள்ளது தேர்தலுக்கு முன்னதாக அவை பகிர்ந்தளிக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
இந்த அன்பளிப்புகளில் முக்கியமானது பந்துவான் ரக்யாட் 1மலேசியா. பிஆர்1எம் 2.0. என்றது அழைக்கப்படுகிறது. பெர்சே 2.0-ஐக் குத்திக்காட்டுபோல.
அதன்கீழ், ரிம3,000-க்கும் குறைந்த வருமானத்தைக் கொண்டுள்ள குடும்பங்கள் ரிம500 பெற தகுதி பெறும்.21 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் திருமணமாகாமல் இருந்து ரிம2,000-க்குக் குறைந்த மாத வருமானத்தைப் பெறுவோராக இருந்தால் அவர்கள் ரிம250 பெறத் தகுதி பெறுவார்கள்.
21 ஆண்டுகளுக்கு மேலாக பணி புரிந்த முன்னாள் இராணுவத்தினர் சுமார் 224,000 பேருக்கு ஆளுக்கு ரிம1,000 வழங்கப்படும்.அதே வேளையில் 55,000 மீனவர்களுக்கு மாத அலவன்சாக ரிம200 கொடுக்கப்படும்.
பெற்றோர்கள் பள்ளி செல்லும் ஒவ்வொரு பிள்ளைக்கும் ரிம100 கேட்டுப் பெறலாம்.பள்ளி மாணவர் எண்ணிக்கை 5.4மில்லியன் என்று மதிப்பிடப்படுகிறது.பல்கலைக்கழக மாணவர்கள் பாடநூல் உதவியாக ரிம250 பற்றுச் சீட்டுக்கு விண்ணப்பம் செய்யலாம்.
பிஆர்1எம் கொடுத்து முடிக்க நாளாகும்
பந்துவான் ரக்யாட் உதவியை சட்டென்று கொடுத்து முடித்துவிட இயலாது.விண்ணப்பங்களையும் முறையீடுகளையும் கவனிக்க நாளாகும். முதலாவது பந்துவான் ரக்யாட் திட்டம் மார்ச் மாதம்தான் முடிவுக்கு வந்தது.
நஜிப் ஏப்ரல் 28-க்குள் பொதுத் தேர்தலை அறிவித்தாக வேண்டும்.இல்லையேல் நாடாளுமன்றம் தானாகவே கலைந்துபோகும்.அதன்பின் தேர்தல் எப்போது என்பதைத் தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்யும். நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட 60 நாள்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
அதை வைத்துப் பார்க்கும்போது மார்ச் மாதம் தேர்தல் நடத்துவதையே நஜிப் விரும்பக்கூடும்.ஏனென்றால் அப்போதுதான் வாக்காளர்களில் பெரும்பகுதியினர் இலவசங்களைப் பெற்ற மகிழ்ச்சியிலும் சீனப் புத்தாண்டைக் கொண்டாடும் மனநிலையிலும் இருப்பார்கள்.
ரொக்க அன்பளிப்பு, நெறிமுறை சார்ந்ததா என்று கேள்வி கேட்கப்படலாம்.ஆனால் பிஆர்1எம் 2.0-ஐ பிஎன் முக்கிய பரப்புரைத் தளமாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
ரிம50,000-க்கும் குறைவாக வருமானம் பெறுவோரின் வருமான வரியில் ஒரு விழுக்காடு குறைக்கப்படுகிறது என்பதைத் தவிர வரி செலுத்தும் 1.4மில்லியன் பேருக்கும் நகர்ப்புற வாசிகளுக்கும் பட்ஜெட்டில் மகிழ்ச்சி தரும் விசயங்கள் அதிகம் இல்லை.
நகர்ப்புற ஏழைகள்
நஜிப்பின் பேச்சில், கிள்ளான் பள்ளத்தாக்கில் முதல்முறையாக வீடு வாங்குவோருக்கு கட்டுப்படியான விலையில் வீடுகள் கிடைப்பதற்கு பட்ஜெட் எவ்வகையில் உதவும் என்று விரிவாக விளக்கப்பட்டது.
கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உருவாக்கம் காணாமல் இருக்கும் பெருமாஹான் ரக்யாட் 1மலேசியா(பிஆர்1எம்ஏ) பற்றி இந்தப் பட்ஜெட்டும் குறிப்பிட்டுள்ளது.
அரசாங்கம் 123,000 கட்டுப்படியான-விலை வீடுகளைக் கட்டத் திட்டம் வைத்துள்ளது.ஆனால், திட்டம் தொடங்குவதற்கு நாளாகலாம்.
அவசரமாக கவனிக்க வேண்டிய, பொதுப்போக்குவரத்தை மேம்படுத்துவது போன்ற மற்ற நகர்ப்புற பிரச்னைகளுக்கு பட்ஜெட் தீர்வு காண முற்படவில்லை.கேடிஎம்-மில் பயணம் செய்யும் குறைந்த வருவாய் பெறுவோருக்கும் மூத்த குடிமக்களுக்கும் 50-விழுக்காடு கட்டணத் தள்ளுபடி மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட்டில் நகர்ப்புற மக்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பது வியப்பளிக்கவில்லை.இவர்கள் பெரும்பாலும் மாற்றரசுக் கட்சிக்கு வாக்களிப்பவர்கள்தானே.
நஜிப், பட்ஜெட் உரையின் தொடக்கத்தில் 55ஆண்டு ஆட்சியில் பிஎன் அதன் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதில்லை என்று சொல்லிப் பெருமைபட்டுக்கொண்டார்.பிஎன் அடுத்தடுத்து 12 தடவை ஆட்சி அமைத்ததே பொதுமக்கள் அதற்குக் கொடுக்கும் அங்கீகாரத்துச் சான்றாகும் என்றார்.
உரையின் முடிவில் மாற்றரசுக் கட்சித்தலைவர் அன்வார் இப்ராகிமையும் இடித்துரைத்தார். பக்காத்தான் ரக்யாட் கொள்கைகளை அவர் துணைப்பிரதமராக இருந்தபோது,செயல்படுத்தி இருக்கலாமே ஏன் செய்யவில்லை என்று வினவினர்.
நஜிப்பின் பட்ஜெட் பேச்சு, நாட்டின் பொருளாதாரத்தைச் சீரமைப்பதும் எதிர்காலத்துக்குப் புதிய பாதையை உருவாக்குவதும் எவ்வளவு கடினமான பணி என்பதை எடுத்துரைக்கவில்லை.மாறாக, மற்றவர்களைக் காட்டிலும் தாம் கெட்டிக்காரர் என்பதைக் காண்பித்துத் தம் செல்வாக்கை உயர்த்திக்கொள்ளும் முயற்சிதான் அதில் தெரிந்தது.
கடந்த நான்காண்டுகளில் பக்காத்தான் நாங்கு மாநிலங்களில் நல்ல முறையில் ஆட்சிசெய்து ஒரு மாற்று அரசாங்கமாக இருக்கும் தகுதி தனக்கு உண்டு என்ற நம்பிக்கையை வாக்காளரிடையே ஏற்படுத்தியிருப்பதுதான் இப்போது பிஎன்னின் பெரிய கவலை.
முந்தைய பட்ஜெட் பேச்சுகளில், 100மாடி மெகா கோபுரம் கட்டும் திட்டம், பல பில்லியன் எம்ஆர்டி திட்டம் அறிவித்தபோது வெளிப்படுத்திய நம்பிக்கையை நஜிப் இம்முறை வெளிப்படுத்தவில்லை.
தொலைநோக்கு திட்டங்கள் வழியாக அல்லாமல் அன்பளிப்புகளை அள்ளிக்கொடுப்பதன்வழி செல்வாக்கை உயர்த்திக்கொள்ள அவர் முடிவு செய்துவிட்டார்போலத் தெரிகிறது.அதுவும் சரிதான், மணிமணியாக தொலைநோக்குத் திட்டங்களை அறிவிக்கலாம்.ஆனால், முடிவில் எதிர்தரப்பில் அமர நேர்ந்தால் என்ன ஆவது.
============================================================
ANDREW ONG: ஏழாண்டுகள் மலேசியாகினியில் செய்தியாளராக பணியாற்றியவர்.