அமைதிப்படை மலேசிய செய்தியாளரைக் கொன்றதை ஒப்புக்கொண்டது

சோமாலிய தலைநகர் மொகாடிஷுவில், கிளர்ச்சிக்காரர்களை எதிர்த்துப் போரிட்டுவரும் ஆப்ரிக்க அமைதிப் படை, இம்மாதத் தொடக்கத்தில் மலேசிய செய்தியாளர் ஒருவரைத் தற்செயலாகச் சுட்டுக்கொன்றதை ஒப்புக்கொண்டிருக்கிறது.

நான்காண்டுகளாக கிளர்ச்சி நடைபெற்றுவரும் அத்தலைநகரில் காவல் சுற்றில் ஈடுபட்டிருந்த புருண்டியைச் சேர்ந்த அமைதிகாப்புப் படையினர், செய்தியாளர் நோராம்பைசூல் முகம்மட் நோர் பயணம் செய்துகொண்டிருந்த வாகனம்மீது சுட்டதில் அவர் உயிர் இழந்தார். இன்னொரு மலேசிய செய்தியாளர் காயமடைந்தார்.

“சம்பவத்தை விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணை வாரியம் அத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நான்கு படைவீரர்கள் சம்பந்தப்பட்டிருப்பதைக் கண்டறிந்து அவர்களுக்கு எதிராக அவர்களின் நாட்டு இராணுவ நடைமுறைப்படி நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைத்துள்ளது”, என்று அமைதிப்படை விடுத்த அறிக்கை ஒன்று கூறியது.

அந்நால்வரும் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் அது கூறிற்று.

மொகாடிஷுவில் ஆப்ரிக்க ஒன்றிய நாடுகளைச் சேர்ந்த 9,000 படைவீரர்கள் அமைதிகாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள் அந்த அமைதிப்படைதான் அல்-கைடா ஆதரவுபெற்ற கிளர்ச்சிப்படையினர் ஐநா-ஆதரவுள்ள அரசாங்கத்தைக் கவிழ்க்காமல் தடுத்து வருகிறது.

ஆயுதமேந்திய கிளர்ச்சிக்காரர்கள் கடந்த மாதம் மொகாடிஷுவிலிருந்து பின்வாங்கினார்கள். ஆனாலும், அந்தக் கடலோர நகர்மீது தங்கள் தாக்குதல் ஓயாது என்றும். கார்-தற்கொலைக்குண்டு, அரசியல் படுகொலைகள், தலைமறைவுத் தாக்குதல் என அது தொடரும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.