வான் அஜிஸா காதல் கடிதத்தை 50,000 ரிங்கிட்டுக்கு ஏலம் விட்டார்

பக்காத்தன் ராக்யாட் மூத்த தலைவர்கள் நேற்று நடத்தப்பட்ட நிதி திரட்டும் விருந்தில் தங்களிடம் இருந்த ‘ மதிப்புள்ள பொருட்களை” ஏலத்திற்கு விட்டனர்.

பொதுத் தேர்தலை ஒட்டி புத்ராஜெயாவுக்குச் செல்வதற்கான தங்கள் போராட்டத்திற்கு ஊக்கம் கொடுப்பதற்குத் தேவையான பணத்தைத் திரட்ட அந்தப் பொருட்கள் ஏலத்தில் விடப்பட்டன.

பாஸ் ஆன்மீகத் தலைவர் நிக் அஜிஸுக்குச் சொந்தமான ஊன்றுகோலும் பிகேஆர் மூத்த உறுப்பினர் சையட் ஹிசின் அலியின் பட்டமளிப்பு படங்களும் ஏலத்திற்கு வந்தவற்றுள் அடங்கும்.

டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங், தமது அண்மைய பிறந்த நாள் கொண்டாட்டங்களின் போது தயாரிக்கப்பட்ட “Singh is King” என்ற திரைப்படத்தை வழங்கிய வேளையில் பாஸ் தலைவர் அப்துல்ஹாடி அவாங் தமது உருவப் படத்தைக் கொடுத்தார்.

அந்த ‘மதிப்புமிக்க பொருட்களில்’ சில தனிப்பட்டவைகளும் இருந்தன. டிஏபி செபூத்தே எம்பி தெரெசா கோக் தாம் பல ஆண்டுகளாக வைத்திருந்த பஞ்சு போன்ற கரடி பொம்மையை ஏலத்திற்கு விட்டார்.

டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்-கின் பேனா ஏலத்திற்கு போன போது காஜாங் சிறைச்சாலையில் அவர் இருந்த போது தமது மனைவிக்கும் மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கும் அந்தப் பேனாவைக் கொண்டு கடிதம் எழுதியதாக கூறப்பட்டது. அது 23,000 ரிங்கிட்டுக்கு ஏலம் போனது.

சிறைச்சாலையிலிருந்து எழுதப்பட்ட காதல் கடிதமும் விற்பனைக்கு வந்தது

பிகேஆர் தலைவர் வான் அஜிஸா வான் இஸ்மாயிலும் மற்றவர்களுக்கு சளைக்காமல் தமது உள்ளத்திற்கு நெருக்கமான- தமது கணவரும் பிகேஆர் மூத்த தலைவருமான அன்வார் இப்ராஹிம் சிறைச்சாலையில் இருந்து எழுதிய காதக் கடிதம் ஒன்றை ஏலத்திற்கு விட்டார்.

ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அந்தக் கடிதத்தை வாசித்த போது வான் அஜிஸா உணர்ச்சி வசப்பட்டு விட்டார். அன்வார் சிறைச்சாலையில் அரசாங்க ‘விருந்தினராக’ இருந்த போது அவரும் வான் அஜிஸாவும் அவரது குடும்பமும் அனுபவித்த துன்பங்களை அந்தக் கடிதம் விவரமாக எடுத்துரைத்தது.

அந்தக் கடிதம் பக்காத்தான் தேர்தல் நிதிக்கு 50,000 ரிங்கிட்டைக் கொண்டு வந்தது.

புத்ராஜெயாவை பக்காத்தான் எடுத்துக் கொள்ளுமானால் என்ன நடக்கும் என்பதை வருணிக்கும் வகையில் தாம் அங்கு வரைந்த ஒவியம் ஒன்றை அரசியல் கேலிச்சித்திர ஒவியர் ஸுனார் ஏலத்திற்கு அனுப்பினார்.

புத்ராஜெயாவுக்குள் அன்வார் வரும் போது மூன்று நபர்கள் ஜெயிலுக்கு செல்வதை அந்த ஒவியம் காட்டியது. “பெரிய மூக்கைக் கொண்ட ஒரு மனிதர்”, “பெரிய முடியைக் கொண்ட ஒரு மனிதர்”, “பெரிய பொய்யர்” ஆகியோரே அந்த மூவர் ஆவர்.

அந்தக் கேலிச்சித்தரத்துக்கு 30,000 ரிங்கிட் கிடைத்தது.

அந்த எதிர்க்கட்சி ஏலத்தின் மூலம் மொத்தம் 182,000 ரிங்கிட் திரட்டப்பட்டது.