எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை ஆட்சேபித்து பெங்கெராங்கில் பேரணி

ஜோகூர் பெங்கெராங் வட்டாரத்தில் உள்ள மீனவர் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்களுக்கு அருகில் கட்டப்படவிருக்கும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இன்று பேரணி ஒன்றை நடத்துகின்றனர்.

‘Himpunan Hijau Lestari Pengerang’ ( பெங்கெராங் நிலையான பசுமைப் பேரணி) என அது அழைக்கப்பட்டுகின்றது.

அந்தத் திட்டம் குறித்துத் தங்களுடன் கலந்தாய்வு செய்யப்படவில்லை என்றும் சுற்றுச்சூழலையும் தாங்கள் வாழ்வாதாரத்தையும் ஆரோக்கியத்தையும் பாதிக்கும் என உள்ளூர் மக்கள் புகார் செய்துள்ளனர்.

அவர்களுக்கு பெங்கெராங் அரசு சாரா அமைப்புக்களின் கூட்டணி வழி காட்டுகின்றது.

60 பில்லியன் செலவிலான அந்த பெட்ரோனாஸ் சுத்திகரிப்பு, பெட்ரோல் ரசாயன ஒருங்கிணைப்பு மேம்பாட்டுத் திட்டம் காலப் போக்கில் மொத்தம் 9,000 ஹெக்டர் நிலப்பரப்பைக் கொண்டிருக்கும்.

அந்தத் திட்டம்  ஜோகூர் மாநிலத்தின் தென் கோடியில் உள்ள 15 கிராமங்களைப் பாதித்துள்ளது.

உள்ளூர் மக்களுடன் கலந்தாய்வு செய்யப்படவில்லை என்பதை அந்த வட்டார எம்பி-யான அஸாலினா ஒஸ்மான் மறுத்துள்ளார்.

அந்தத் திட்டத்தை வட்டாரத்தில் வாழும் பெரும்பான்மை மக்கள் ஏற்றுக் கொள்கின்றனர் எனக் கூறப்படுவதை நிராகரிக்கும் பொருட்டு இன்றைய ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அவர்கள் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமையும் இடத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இரண்டு இடங்களில் கூடுவர். பின்னர் அவர்கள் பெங்கெராங்கில் உள்ள டாத்தாரான் சுங்கை ரெங்கிட்-டை நோக்கி ஊர்வலமாகச் செல்வர்.