கடிதம்- Chris Anthony
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2013 பட்ஜெட் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கம் போலவே அதற்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. மாற்றரசுக் கட்சி, அது தேர்தல் பட்ஜெட் என்றும் நாடும் மக்களும் நலமே வாழ அதில் புதிதாக எதுவுமில்லை என்றும் கூறி ஒதுக்கித்தள்ளியது.
சுருங்ககூறின், பிழைப்பு நடத்தப் போராடும் மக்களுக்கு 55ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் ஓர் அரசு பில்லியன் கணக்கில் ரொக்கப் பணத்தை வாரி வழங்க முன்வந்துள்ளது.
மக்கள் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஒரு புதிய அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்க தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில் இந்தப் பட்ஜெட் வந்திருப்பதுதான் குறிப்பிடத்தக்கது.பிஎன் அரசு பட்ஜெட்டைத் தேர்தலுக்காக முழுக்க முழுக்கப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.
மக்களுக்குப் பண உதவி செய்வது தவறல்ல; அது எப்போதும் வரவேற்கத்தக்கதே. ஆனால், ஒரு தடவை அல்லது இரண்டு தடவை ரிம500 அல்லது ரிம1,000 கொடுப்பது அவர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விடாது.
பெரும்பாலான மலேசியர்கள் இப்படிப்பட்ட உதவியை எதிர்பார்க்கவில்லை. அவர்கள் சில முக்கிய பகுதிகளில் நல்ல முறையில் திட்டமிடப்பட்ட கொள்கைகளும் திட்டங்களும் தேவை என்று நினைக்கிறார்கள்.
1. கல்வி- எல்லா குடிமக்களுக்கும் தரமான இலவக் கல்வி;
2. சுகாதாரப் பராமரிப்பு- ஏழை, பணக்காரர் என்ற வேறுபாடில்லாது எல்லாருக்கும் கட்டுப்படியான விலையில் எளிதாகக் கிடைக்கும் தரமான மருத்துவம்;
3. வீடமைப்பு- குறைந்த விலையில் வசதியான வீடுகள்;
4. பொதுப்போக்குவரத்து- பாதுகாப்பாகவும் குறைந்த கட்டணத்திலும் திறமையாக செயல்படுவதாகவும் நம்பகமாகவும் இருத்தல்;
5. குடிமக்களாகிய தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் பாதுகாப்பு.
மக்களும் நாடும் நலமே வாழத் தேவையான இந்த அடிப்படை விவகாரங்கள்மீது 2013 பட்ஜெட் கவனம் செலுத்துவதாக தெரியவில்லை.
55 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பிஎன் அரசு, பண உதவிகள் செய்துதான் மக்களின் ஆதரவைத் திரட்ட வேண்டும் என்ற நிலையில் இருக்கக்கூடாது.
அப்படிச் செய்வது அரை நூற்றாண்டுக் காலமாக மக்களுக்கான பொறுப்புகளைச் செய்யத் தவறி விட்டதை ஒப்புக்கொள்வதாக இருக்கும் என்பதே என் கருத்து. 55 ஆண்டுக்காலம் ஆட்சியில் இருந்த பின்னும் பண அன்பளிப்புச் செய்தே ஆதரவைப் பெற வேண்டும் என்ற நிலை இழிவானதன்றோ?
இப்போது நம்முன் நிற்கும் பெரிய கேள்வி, அன்பளிப்புகளை வாரி வழங்கும் இந்த சாந்தா குளோஸ் பட்ஜெட் மக்களின் மனத்தை மாற்றி அவர்களை பிஎன்னுக்கு வாக்களிக்க வைக்குமா என்பதே. பிஎன் ஆச்சரியப்படப் போகிறது. அரை நூற்றாண்டு ஆட்சியில் இருந்தும் மக்களின் சுய மரியாதையையும் அறிவாற்றலையும் மனப்பக்குவத்தையும் பிஎன் குறைத்து மதிப்பிட்டு விட்டது என்றே நினைக்கிறேன்.