சிலாங்கூர் மாநிலத்தின் மீது பரிவும் கருணையும் காட்டுவது இருக்கட்டும். முதலில், பகாங் மாநிலத்தை இயற்கை வள பேரழிவிலிருந்து காப்பாற்றுங்கள் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சேவியர் ஜெயக்குமார் இன்று விடுத்த ஓர் அறிக்கையில் பகாங் மாநில அரசுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
பகாங்கிலிருந்து சிலாங்கூரின் உத்தேச லங்காட் 2 நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு நீர் கொண்டு வரும் திட்டத்தினால் பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் நீரில் மூழ்குவதையும், உயினங்களும் அரிய வகை தாவரங்களும் அழிவதையும் ஒரு பொருட்டாகக் கருதாமல் மத்திய அம்னோ அரசின் வாத்தியத்திற்கு பகாங் அரசு தாளம் தப்பால் நாட்டியமாடுவதாக சேவியர் கூறினார்.
“குடிநீர் பற்றாக்குறையை எதிர்நோக்கும் சிலாங்கூர் மாநிலத்திற்கு உதவுவது போல் நாடகம் நடத்துவதை பகாங் அரசு நிறுத்திக் கொண்டு தனது சொந்த மாநிலத்தில் இயற்கை வளங்கள் பேரளவில் அழிக்கப்படுவதை தடுத்து நிறுத்துவதற்கான வழிகளை ஆராய வேண்டும் என்று சிலாங்கூர் ஆலோசனை கூறியுள்ளது.
“அம்னோ பினாமிகளுக்கு கோடிக் கணக்கில் குத்தகை கிடைக்க வேண்டும் என்பதற்காக சிலாங்கூரில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டதைப் போன்ற பொய்யான ஒரு தோற்றத்தை உருவாக்கியுள்ள மத்திய அரசுக்கு துணை போகும் ஆசையில் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களையும் எண்ணிலடங்கா உயிரினங்களையும் இயற்கை அருளிய அரிய வகை தாவரங்களைம் பலி கொடுக்க பகாங் அரசு தயாராகி விட்டது”, என்று சேவியர் குற்றஞ்சாட்டினார்.
சிலாங்கூருக்கு நீரைத் தருவிக்கும் திட்டத்திற்காக பகாங் மாநிலத்தில் கிளாவ் நீர்த்தேக்கம் மற்றும் செமன்தான் ஆற்றில் நீர் அழுத்த மையம் ஆகியவற்றை நிர்மாணிக்கும் பணிகள் தொடங்கி விட்டன. இதனால் “´லாக்கும்”’ நிரந்தர வனப்பகுதியிலுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது. இது தவிர மெம்பாகா மற்றும் லெம்பா கிளாவ் பெல்டா குடியேற்றப் பகுதிகளும் இந்த நீர்தேக்கத் திட்டத்தினால் பாதிக்கப்படவுள்ளன. அதோடு மட்டுமின்றி, கிளாவ் நீர்த்தேக்க கட்டுமானத்தினால் பெந்தோங்கிலுள்ள பூர்வக் குடியினரின் குடியிருப்புப் பகுதிகளும் நீரில் மூழ்கி விடும். ஆயிரக்கணக்கான பெல்டா குடியேற்றக்காரர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழப்பதற்கும் சுமார் 13,000 பூர்வக் குடியினர் தங்களின் இருப்பிடத்தை இழப்பதற்கும் இத்திட்டம் வழி வகுத்து விடும் என்றாரவர்.
“சுற்றுச்சூழலுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய இத்திட்டத்திற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரசு சாரா அமைப்புகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன”, என சேவியர் ஜெயக்குமார் சுட்டிக்காட்டினார்.