அலி ரூஸ்தாம் புதல்வர் திருமணம் மலேசியச் சாதனை

மலாக்கா ஆயர் குரோ டேவான் துன் அலி புக்கிட் கட்டில் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற மலாக்கா முதலமைச்சர் முகமட் அலி ரூஸ்தாம் மூத்த புதல்வருடைய திருமண விருந்தில் கிட்டத்தட்ட 130,000 பேர் கலந்து கொண்டனர்.

மணமகன் 26 வயதான முகமட் ரித்வான், மணமகள் 26 வயதான நூர் அஸிஹா முகமட் அலி திருமண நிகழ்வுகள் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கி எட்டு மணி நேரத்திற்கு நீடித்தன.

சிலாங்கூர் சுல்தன் ஷாராபுதீன் இட்ரிஸ் ஷா, மலாக்கா யாங் டி பெர்துவா நெகிரி முகமட் கலீல் யாக்கோப், உள்துறை துணை அமைச்சர் அபு செமான் யூசோப், மணமகனின் தாத்தாவும் முன்னாள் மலாக்கா முதலமைச்சருமான அபு ஸாஹார் இஸ்னின் ஆகியோர் அந்த திருமணத்தில் கலந்து கொண்ட பெருமக்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

மணமக்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பு ட்யூசன் வகுப்பில் முதல் முறையாக சந்தித்தனர்.

நூர் அஸிஹா-வுக்கு ஆறாயிரம் ரிங்கிட் மதிப்புள்ள தங்கத்தையும் 22,222.22 ரிங்கிட் ஸ்ரீதனத்தையும் மணமகன் வழங்கினார்.

திருமண விருந்து நிகழ்வு ஒன்றில் மிக அதிக எண்ணிக்கையில் விருந்தினர்கள் கலந்து கொண்டது அலி ரூஸ்தாம் புதல்வர் திருமணமாகும். அதனால் அது மலேசியச் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

அந்தச் சாதனையை குறிக்கும் வகையில் மலேசிய சாதனைப் புத்தகப் பேராளர் சுல்ஹாய்ரி முகமட் ஜின் சான்றிதழ் ஒன்றையும் அலி ரூஸ்தாமிடம் வழங்கினார்.

-பெர்னாமா