பினாங்கில் வெற்றிபெற அஹ்மட் ஜஹிடியின் ‘3-3-3-1 சூத்திரம்’

13வது பொதுத் தேர்தலில் பிஎன் பினாங்கில் வெற்றிபெற விரும்பினால் அம்னோ அதன் 11சட்டமன்ற இடங்களைத் தக்க வைத்துக்கொண்டு  3-3-3-1 சூத்திரத்தையும் கடைப்பிடிக்க வேண்டும்.

அந்தச் சூத்திரத்தை விளக்கிய அம்னோ உதவித் தலைவர் அஹ்மட் ஜஹிட் ஹமிடி, அதன்படி அம்னோ, மசீச, கெராக்கான் ஆகியவை மூன்று இடங்களையும் மஇகா ஓர் இடத்தையும் வெல்ல வேண்டும் என்றார்.

“அதைச் சாதித்தால் ஓர் இடத்தைக் கூடுதலாகப் பெற்று பிஎன்னால் ஆட்சி அமைக்க முடியும்.

“ஆனால், பங்காளிக் கட்சிகள் மேலும் கடுமையாக உழைத்தால் சட்டமன்றத்தில் இன்னும் கூடுதலான இடங்களை வெற்றிபெற முடியும்”.

தற்காப்பு அமைச்சரான அஹ்மட் ஜஹிட், நேற்று பட்டர்வொர்தில், ‘பிஎன்னே இளைஞர்களின் தேர்வு’ என்னும் மாநில- அளவுத் திட்டத்தைத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

2008 பொதுத் தேர்தலில், 40 சட்டமன்ற இடங்களில் பதினொன்றை மட்டுமே பிஎன்னால் வெல்ல முடிந்தது. டிஏபி-யே அதிகமான இடங்களை- 19 இடங்களைப் பெற்றது. பிகேஆர் ஒன்பது இடங்களையும் பாஸ் ஓர் இடத்தையும் பெற்றன.