கேஎல்சிசி என்ற Suria Kuala Lumpur City Centre வளாகத்தில் நடத்தப்பட்ட ‘வி கழுத்து தின’ கூட்டத்தைப் பதிவு செய்ய ஊடகங்கள் அனுமதிக்கப்படவில்லை.
அந்தக் கூட்டத்தைப் பதிவு செய்து கொண்டிருந்த ஊடகவியலாளர்களை அணுகிய இரண்டு கேஎல்சிசி காவலர்கள் அவ்வாறு செய்ய வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டனர்.
அந்த நிகழ்வு பற்றிய செய்திகளைச் சேகரிப்பதற்காக உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்கள் அங்கு கூடியிருந்தன. அந்த ஊடகங்களின் பேராளர்கள் பயன்படுத்திய பெரிய கேமிராக்களுக்கு முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும் என அந்தக் காலவலர்கள் கூறினார்.
பள்ளிக்கூடங்களில் திருநங்கைகளை அடையாளம் காண்பதற்கு வெளியிடப்பட்ட வழிமுறைகள் மீது சர்ச்சை மூண்ட பின்னர் ‘வி கழுத்து தினத்துக்கு’ ஏற்பாடு செய்யப்பட்டது.
பத்துப் பேர் கலந்து கொண்ட அந்த நிகழ்வு மாலை 5 மணிக்குத் தொடங்கியது.
அந்த விஷயம் பற்றி விவாதிப்பதற்காக கேஎல்சிசி பாதுகாப்பு நிர்வாக அலுவலகத்துக்கு தமது நண்பர்கள் மாலை மணி 5.45 வாக்கில் கொண்டு செல்லப்பட்டதாக 19 வயதான அடாம் ஷாரிமான் கூறினார்.
தாம் சொந்தமாக அந்த நிகழ்வுக்கு வந்ததாகவும் எந்த அரசு சாரா அமைப்பையும் பிரதிநிதிக்கவில்லை என்றும் அடாம் கூறிக் கொண்டார்.
ஒளிப்பதிவு செய்ய வேண்டுமானால் ஊடகவியலாலர்கள் அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என கேஎல்சிசி பாதுகாப்பு மேற்பார்வையாளர் இப்ராஹிம் ஒமார் கூறியதாக அடாமுக்குப் பின்னர் தெரிவிக்கப்பட்டது.
எத்தகைய செய்திகள் வெளியிடப்பட்டும் என்பது தெரியாததால் முக்கிய நாளேடுகளைக் கூட நாங்கள் ஒளிப்பதிவு செய்வதற்கு அனுமதிப்பது இல்லை என அந்த மேற்பார்வையாளர் சொன்னதாகவும் அடாம் தெரிவித்தார்.
“அது உத்துசான் மலேசியா, பெரித்தா ஹரியானாக இருந்தால் அவை என்ன எழுதும் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் மற்ற ஊடகங்கள் அவை செய்திகளை எப்படித் திரிக்கும் என்பது எங்களுக்குத் தெரியாது. அதனால் படங்கள் பிடிப்பது சரியானது. ஆனால் வீடியோ பதிவு செய்ய நீங்கள் அனுமதி பெற வேண்டும். பாதுகாப்பு மேற்பார்வையாளர் எங்களிடம் சொன்னது அது தான்,” என அடாம் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
கேஎல்சிசி பூங்கா, கேஎல்சிசி-யின் கீழ் வரும் தனியார் சொத்து என்றும் பாதுகாப்பு ஊழியர்கள் அவர்களிடம் தெரிவித்ததாகவும் அடாம் சொன்னார்.
ஒருவர் அணியும் ஆடையைப் பொறுத்து அவருக்கு எதிராக பாரபட்சம் காட்டப்படுவது நியாயமில்லாதது என்ற விழிப்புணர்வைத் தோற்றுவிப்பதே ”வி கழுத்து தினத்தின் நோக்கம்’ என அடாம் விளக்கினார்.