சுபாங் ஜெயாவில் உள்ள எம்பயர் கேலரி கடைத் தொகுதியில் இன்று காலை நிகழ்ந்த வெடிப்புச் சம்பவத்தில் அந்தக் கட்டிடத்தின் மூன்று தளங்கள் சேதமடைந்தன. நால்வர் காயமடைந்தனர். யாரும் கொல்லப்பட்டதாக இது வரை தகவல் இல்லை.
காயமடைந்தவர்களில் இருவர் பாதுகாவலர்கள். அவர்களுக்கு சிறிய அளவிலேயே காயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
அந்தக் கட்டிடத்தின் கீழ் தளத்தில் அமைந்துள்ள ஹோட்டலில்-வெடிப்பு நிகழ்ந்த இடம்- தங்கியிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அங்குள்ள ஸ்டார்பக்ஸ் கடையில் அதிகாலை மணி 3.45 வாக்கில் எரி வாயு தோம்பு வெடித்ததே அந்தச் சம்பவத்துக்குக் காரணம் என ஆங்கில மொழி நாளேடான தி ஸ்டார் கூறியது.
என்றாலும் அந்த வெடிப்புக்கான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தமது டிவிட்டர் பக்கத்தில் சுபாங் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் ஹன்னா இயோ எழுதியுள்ளார். அவர் இன்று காலை சம்பவம் நடந்த இடத்திற்கு சென்றார்..
அந்தக் கட்டிடத்தின் கீழ் தளங்கள் அந்தச் சம்பவத்தில் சேதமடைந்துள்ளன. அங்கு கண்ணாடிகள் நொறுங்கிக் கிடந்தன. தரையில் விரிசல்களும் ஏற்பட்டுள்ளன. பல கார்களும் சேதமடைந்தன.’
சம்பவம் நடந்த இடத்துக்கு 1.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எஸ்எஸ் 18லும் வெடிப்புச் சத்தம் கேட்டது. அந்தப் பகுதியில் காலை மணி 8.45 வாக்கில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டதாக அங்கு வசிக்கும் ஒருவர் கூறினார்.
அந்த வெடிப்பின் தாக்கத்தினால் தமது வீடு அதிர்ந்தது என எஸ்எஸ்17 குடியிருப்பாளர் ஒருவர் சொன்னார்.
அந்தக் கட்டிடத்தை சுற்றிலும் போலீசார் வேலி அமைத்துள்ளனர். பல கட்டிடத்துக்கு வெளியில் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
அந்தக் கட்டிடத்துக்கு அருகில் உள்ள அடுக்கு மாடி வீடுகளில் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களது வீடுகளிலிருந்து வெளியேற வேண்டும் என போலீசார் ஆணையிட்டுள்ளனர்.