மலேசியர்கள், அரசாங்க-ஆதரவு ஊடகங்களின் ஒருமித்த தாக்குதல், மற்ற திசைதிருப்பும் நாடகங்கள் போன்றவற்றில் கவனத்தைச் சிதறடிக்காமல் தேர்தல் சீரமைப்பு மீது குறியாக இருக்க வேண்டும் என்று பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
“என் வீட்டுக்கு முன்னால் வேடிக்கையாக கூத்தாடினார்களே அதைப் பொருட்படுத்தாதீர்கள். அது ஒரு கோமாளித்தனம். ஆனால், குறைபாடுடைய தேர்தல் நடைமுறை என்பது வேடிக்கைக்குரிய விசயமல்ல”, என்று அம்பிகா நேற்று பெட்டாலிங் ஜெயாவில் ஒரு கருத்தரங்கில் கூறினார்.
அவர் தமதுரையில், அரசாங்கத்தைக் கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக மத்திய நீரோட்ட ஊடகங்கள் பெர்சேயையும் சுவாராமையும் குற்றம் சாட்டியிருப்பது பற்றியும் சுவாராம் மீது மலேசிய நிறுவனங்கள் ஆணையமும்(சிசிஎம்) சங்கப் பதிவகமும் (ஆர்ஓஎஸ்) விசாரணை மேற்கொண்டிருப்பது பற்றியும் குறிப்பிட்டார்.
“ஸ்கோர்பியன் தொடர்பாகத்தான் (சுவாராமுக்கு எதிரான) இந்த விசாரணை நடைபெறுகிறது என்பதில் எனக்கு எள்ளளவும் ஐயம் இல்லை. 24 ஆண்டுகளாக சுவாராமை அரசாங்கம் எதுவும் செய்யவில்லை. இப்போது ஏன் திடீரென்று சுவாராமை விரட்டுகிறது?”, என்றவர் வினவினார்.
பிரான்ஸ் நாட்டு நிறுவனமான டிசிஎன்எஸ்- இடம் மலேசியா இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்கள் வாங்கியதில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி அதன்மீது விசாரணை தொடங்குவதற்கு காரணமாக இருந்தது என்பதால்தான் தன்மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக சுவாராம் கூறி வருகிறது.
“எங்கள் மீதும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கு மூலகாரணம் என்னவென்பது எங்களுக்குத் தெரியும். எங்கள் பணியைச் செய்ய விடாமல் கவனத்தைத் திசை திருப்புவதுதான் அவர்களின் நோக்கம்”, என்று அம்பிகா குறிப்பிட்டார்.
“நாங்கள் Open Society Institute (ஒஎஸ்ஐ), National Democratic Institute (என்டிஐ) ஆகியவற்றிடமிருந்து தேர்தல் விளக்கத் திட்டம் ஒன்றுக்காக ரிம90,000 பெற்றதாக ஏற்கனவே கூறியுள்ளோம்.
“பெர்சே பேரணியைப் பொறுத்தவரை, எங்களுக்குப் பணம் தேவையில்லை. மக்கள் தாங்களே அதற்கு வருகிறார்கள். அவர்களை வரவழைக்க ஆளுக்கு ரிம50 ரிங்கிட் கொடுப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால் மக்கள்தான் கைக்காசை செலவுபண்ணி வருகிறார்கள், பெர்சே டி-சட்டைகளை விலை கொடுத்து வாங்குகிறார்கள்”, என்றாரவர்.
“அதற்கு முழுக்க முழுக்க மலேசியர்கள்தாம் பணம் கொடுத்து உதவுகிறார்கள். நாங்கள் எதிர்நோக்கும் சட்ட வழக்குகளை எதிர்கொள்ளவும் நிதி ஒன்றைத் தொடக்கி இருக்கிறோம்”.
செய்தி கொண்டுசெல்லும் தூதுவர்களை மிரட்டுவதால் செய்தி வலுப்பெறும்
மக்களுக்குச் செய்தி கொண்டுசெல்லும் தூதுவர்களான பெர்சே, சுவாராம் போன்ற அமைப்புகள்மீது அரசாங்கம் தொடர்ந்து நடத்தும் தாக்குதல்களால் அவை கொண்டு செய்தியின் வலிமைதான் கூடுகிறது என்று அம்பிகா எச்சரித்தார்.
“பெரிய தவறு செய்கிறார்கள். என்ஜிஓ-களை மூழ்கடிக்கப் பார்க்காதீர்கள். வாங்கிய நீர்மூழ்கிக் கப்பல்கள் சரியாக மூழ்கின்றனவா என்பதில்தான் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்”, என்றார்.
சுவாராமுக்கு சிசிஎம்-மும் ஆர்ஓஎஸ்-ஸும் கொடுக்கும் தொல்லைகளும் தேர்தல் ஆணையம் தேர்தல் சீரமைப்பில் அக்கறை காட்டாதிருப்பதும், பொது அமைப்புகள் அரசியல் எஜமானர்களின் ஏவலைச் செய்வதில்தான் ஆர்வம் காட்டுகின்றனவே தவிர சுயேச்சையாக செயல்படுவதில்லை என்பதைத்தான் காண்பிக்கிறது என்று அம்பிகா கூறினார்.
“வெளிநாட்டவர் வாக்காளர்களாக பதிவு செய்யப்படுவது பற்றி புகார்கள் வந்துள்ளன. புரொஜெக்ட் ஐசி நடப்பதை மறந்து விடாதீர்கள். இல்லை என்று சிலர் மறுக்கக்கூடும்.ஆனால், முன்பு அது சாபாவில் நடந்துள்ளது. இப்போது அரச ஆணையம் அமைக்கப்பட்டு அதை விசாரித்து வருகிறது”
எதிர்வரும் பொதுத் தேர்தலில் மோசடி எதுவும் நிகழாதிருக்க மக்கள் திரண்டு வந்து வாக்களிக்க வேண்டும் என்று அம்பிகா கேட்டுக்கொண்டார்.