மலேசியாகினிக்கு வெளியீட்டு அனுமதியைக் கொடுப்பதில்லை என்ற உள்துறை அமைச்சு முடிவை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் ரத்துச் செய்துள்ளது, பேச்சு சுதந்திரம் என்பது வெளியீட்டுச் சுதந்திரத்தையும் உள்ளடக்கியுள்ளது, அது அடிப்படைச் சுதந்திரம் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
அத்துடன் மலேசியாவில் பத்திரிக்கை சுதந்திரத்துக்குக் குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் ஆகும்.
அந்த எண்ணங்களை வழக்கில் மலேசியாகினியை பிரதிநிதித்த வழக்குரைஞர் கே சண்முகாவும் சுதந்திர இதழியல் மய்ய நிர்வாக அதிகாரி மாஸ்ஜாலிசா ஹம்சாவும் தெரிவித்தனர்.
அந்த முக்கியமான தீர்ப்பு குறித்த செய்தியை வெளியிட்ட நியூயார்க் டைம்ஸ் நாளேடு அந்த இருவரையும் மேற்கோள் காட்டியிருந்தது.
அரசாங்கத்துடன் தொடர்புடைய அச்சு ஊடகங்கள் ஆதிக்கம் செலுத்தும் மலேசியாவில் அந்தத் தீர்ப்புக்கு பின்னர் பத்திரிக்கை ஒன்றை வெளியிடுவதற்கான அனுமதியைப் பெறுவது எளிதாகும் என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
“பத்திரிக்கை ஒன்றை வெளியிடுவதற்கான உரிமை அடிப்படை உரிமை என அங்கீகரிக்கப்பட்டுள்ளது மிகவும் மிகவும் குறிப்பிடத்தக்க அங்கீகாரம் ஆகும்.”
“நீதிபதி ஒருவர் அதனைச் சொன்னதை நாங்கள் இப்போதுதான் முதன் முறையாகச் செவிமடுக்கிறோம்,” என சண்முகா சொன்னார்.
அத்தகைய அனுமதிக்கான விண்ணப்பத்தை அரசாங்கம் நிராகரிப்பதை அந்தத் தீர்ப்பு மேலும் சிரமமாக்கியுள்ளது. ஏனெனில் உத்தேச வெளியீடு பொது ஒழுங்கிற்கு அல்லது தேசியப் பாதுகாப்புக்கு மருட்டலை ஏற்படுத்தும் அல்லது நன்னெறிகளுக்கு முரணானது என்பதை அதிகாரிகள் காட்ட வேண்டியிருக்கும் என்றார் அவர்.
உயர் நீதிமன்ற முடிவு “மலேசியாவில் பத்திரிக்கை சுதந்திரத்துக்கும் பேச்சு சுதந்திரத்துக்கும் மிகவும் முன்னேற்றகரமான தீர்ப்பு” என மாஸ்ஜாலிசா வருணித்தார்.
“அது மிகவும் குறிப்பிடத்தக்கது,” எனக் கூறிய அவர், அண்மைய சில ஆண்டுகளில் அச்சு பத்திரிக்கைகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.
“பெரும்பாலும் சிறிய அளவிலான வெளியீடுகளுக்கு மட்டுமே அந்த அனுமதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. மலேசியாகினி பெறக் கூடிய தேசிய அளவிலான வாசகர்களைக் கொண்ட வெளியீடுகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை,” என்றும் மாஸ்ஜாலிசா சொன்னார்.
அந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து வெளியீட்டு அனுமதிகளுக்கான விண்ணப்பம் அதிகரிக்கும் எனக் கணிப்பது சிரமம் என்றார் அவர். காரணம் செய்திப் பத்திரிக்கைகளை நடத்துவதற்கு பெரும் மூலதனம் தேவைப்படுகிறது.
பெரும்பாலான மலேசியர்கள் குறிப்பாக கிராமப்புறங்களைச் சார்ந்தவர்கள் இன்னும் அச்சு ஊடகங்களை நம்பியுள்ளனர். புதிய நாளேடு ஒன்று அந்தப் பகுதிகளில் அரசாங்கத்துடன் தொடர்புடைய ஊடகங்களின் ஆதிக்கத்துக்கு சவால் விடுக்கக் கூடும்.”
“மலாய் உட்புறப் பகுதிகளை நோக்கமாகக் கொண்ட ஒரு பத்திரிக்கை தொடங்கப்பட்டால் அது மக்களுக்குக் கிடைக்கும் தகவல்கள் அடிப்படையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். காரணம் அது பல வகையான கருத்துக்களுக்கு இடம் கொடுக்கும். பல அரசியல்வாதிகளுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் வாய்ப்பு வழங்கும்.”
இதனிடையே அந்தத் தீர்ப்பை எதிர்த்து அரசாங்கம் முறையீடு செய்து கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டாலும் நாளேடு ஒன்றை வெளியிடுவதற்கான மலேசியாகினி விண்ணப்பம் அங்கீகரிக்கப்படும் என அதன் தலைமை நிர்வாக அதிகாரி பிரமேஷ் சந்திரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அந்த வழக்கை எப்படித் தொடருவது என்பது மீது சட்டத் துறைத் தலைவருடைய அலுவலக ஆலோசனையை அமைச்சு நாடும் என உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசாங்கம் அந்த முடிவுக்கு எதிராக ஒரு மாதத்திற்குள் முறையீடு செய்து கொள்ள வேண்டும்.