பக்காத்தான் ரக்யாட் அதன் நிழல் பட்ஜெட்டில் அறிவித்துள்ள ரிம1,100 குறைந்த பட்ச சம்பளக் கொள்கை “நடைமுறைக்கு உகந்ததல்ல” என்று பாரிசான் நேசனல் இளைஞர் பகுதி குறைகூறியுள்ளது. அதனால் பொருளாதாரத்துக்குக் கேடுதான் விளையும் என்றது எச்சரித்தது.
“மாற்றரசுக் கட்சியின் பரிந்துரை நடைமுறைக்கு ஏற்றதல்ல அது பொருளாதாரத்துக்குப் பேரழிவை உண்டுபண்ணும்… பொருளாதாரமே நிலைகுத்தி போகும்போது குறைந்தபட்ச சம்பளத்தால் ஆகப்போவது என்ன?”, என்று அதன் தலைவரும் ரெம்பாவ் எம்பியுமான கைரி ஜமாலுடின் அபு பக்கார் (இடம்) இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டமொன்றில் வினவினார்.
இதில் வேடிக்கை என்னவென்றால், தொழிலாளர்களுக்கு உதவும் நோக்கைக் கொண்டதுதான் குறைந்தபட்ச சம்பளக் கொள்கை ஆனால், பக்காத்தான் நிழல் பட்ஜெட்டில் உள்ளதுபோல் சம்பளம் உயர்வாக இருந்தால் நிறுவனங்களை இழுத்து மூட வேண்டியிருக்கும் அதனால் கொள்கையின் நோக்கமே தோல்வியுறும் என்றாரவர்.
அதன் விளைவாக தொழிலாளர்களுக்குப் பாதகமான பணவீக்கம், வேலையின்மை போன்ற நிலைமைகளே உருவாகும்.
மக்களின் ஆதரவைப் பெற வேண்டும் என்பதற்காக பக்காதான் “முன்பின் யோசிக்காமல்” பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்வதாக கைரி சாடினார்,
அந்தச் செய்தியாளர் கூட்டத்தில் கலந்துகொண்ட ஹுலு சிலாங்கூர் எம்பி பி.கமலநாதன், பிஎன்னின் ரிம900 குறைந்த பட்ச சம்பளக் கொள்கை திடுமெனக் கொண்டுவரப்பட்ட ஒன்றல்ல என்றார். அது, தேசிய சம்பள மன்றமும் உலக வங்கியும் கவனமுடன் செய்த ஆய்வுக்குப் பின்னர் முடிவு செய்யப்பட்ட ஒன்று.
அதைக் கொண்டு வருமுன்னர் சம்பந்தப்பட்ட அனைவருடனும் பிஎன் அரசு ஆலோசனை கலந்தது.
“அவர்கள் ரிம1,100 குறைந்த பட்ச சம்பளம் பற்றி யாருடன் கலந்து பேசினார்கள், எப்படி முடிவு செய்தார்கள் என்பதை அறிய விரும்புகிறோம்”, என்றார்.
பக்காத்தான் பரிந்துரைக்கு எஸ்எம்ஐ-கள் எதிர்ப்பு
மலேசிய சிறிய, நடுத்தர தொழில் சங்கத்திடமிருந்து(எஸ்எம்ஐ) மகஜர் ஒன்றைப் பெற்றுக்கொண்ட பின்னர் கைரியும் கமலநாதனும் செய்தியாளர்களிடம் பேசினர். பக்காத்தானின் பரிந்துரை செயலாக்கம் காணாமல் பிஎன் எம்பிகள் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று எஸ்எம்ஐ அம்மகஜரில் கோரிக்கை விடுத்துள்ளது.
அச்சங்கத்தின் தலைவர் தே கீ சின், சங்க உறுப்பினர்கள் ரிம1,100 குறைந்த பட்ச சம்பளத்தை ஏற்கவில்லை என்றார்.
“அவர்கள் அதை ஆதரிக்கவில்லை… அது நடைமுறைக்கு வந்தால் பல எஸ்எம்ஐ-கள் படுத்து விடும்”, என்று தே எச்சரித்தார்.
பிரதமரும் நிதி அமைச்சருமான நஜிப் அப்துல் ரசாக் கூட்டரசு பட்ஜெட்டைத் தாக்கல் செய்வதற்கு முதல் நாள் வெளியிடப்பட்ட பக்காத்தான் நிழல் பட்ஜெட்டில் ரிம1,100 குறைந்த பட்ச சம்பளமாக பரிந்துரைக்கப்பட்டிருந்தது.