மலாக்கா முதலமைச்சர் முகமட் அலி ருஸ்தாமின் மூத்த புதல்வர் திருமணச் சடங்குகளுக்கு மாநில அரசு நிறுவனங்கள் ஆதரவு அளித்துள்ளதை மலாக்கா மாநில மேம்பாட்டுக் கழகத்திலிருந்து (PKNM) கசிந்துள்ள ஆவணம் ஒன்று காட்டுகிறது.
நாடாளுமன்றத்தில் இன்று வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய பாஸ் பொக்கோக் செனா உறுப்பினர் மாஹ்புஸ் ஒமார் அதனைத் தெரிவித்தார்.
செப்டம்பர் 30ம் தேதி PKNM “அந்தத் திருமணச் சடங்களுக்கான போக்குவரத்து ஏற்பாடுகளை” விவாதிப்பதற்காக கூட்டம் ஒன்றை நடத்தியதை அந்த ஆவணம் உணர்த்துவதாக அவர் சொன்னார்.
“ஒரு விருந்தினருக்கு 10 ரிங்கிட் என்ற விகிதத்தில் அந்த நிகழ்வுகளுக்கு ஆதரவு கொடுக்கப்பட்டதை முதலமைச்சருடைய சிறப்பு அதிகாரி இன்று ஒப்புக் கொண்டார். அது தனிப்பட்ட நிகழ்வுகள் என்பதால் எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் அதனை விசாரிக்க வேண்டும்,” என மாஹ்புஸ் கேட்டுக் கொண்டார்.
“அந்தக் கூட்டக் குறிப்புக்கள் சம்பந்தப்பட்ட அரசாங்கத் துறைகளை குறிப்பிட்டுள்ளதுடன் முதலமைச்சரிடமிருந்து எந்த பில்களுக்கும் பணம் கோரப்படக் கூடாது, எல்லாம் இலவசம் என்றும் தெரிவிக்கின்றன.”
ஊடகங்களுக்குப் பின்னர் விநியோகம் செய்யப்பட்ட அந்தக் கூட்டக் குறிப்புக்களின் படி, “செப்டம்பர் 30ம் தேதி முதலமைச்சருடைய புதல்வர் திருமணத்துக்கான போக்குவரத்து, தூய்மை, வெளி அரங்கு அலங்காரம் ஆகியவற்றுக்கான ஏற்பாடுகளை விவாதிப்பதற்காக” அந்தக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என PKNM தலைமை நிர்வாக அதிகாரி யூசோப் ஜந்தான் உத்தரவிட்டுள்ளார்.
“துறைகளின் விருப்பத்துக்கு ஏற்ப எல்லா ஆயத்தங்களும் செய்யப்படலாம் என்றும் முதலமைச்சருக்கோ அல்லது மாநில அரசாங்கத்துக்கோ எந்த பில்லும் அனுப்பப்படக் கூடாது என்றும் பின்னர் யூசோப் வலியுறுத்தினார்,” என அந்த கூட்டக் குறிப்புக்கள் மேலும் தெரிவித்தன.