பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம், கொல்லப்பட்ட பாஸ் தலைவரான இப்ராஹிம் மாஹ்முட்-டை ஒரு முறை துரோகி என முத்திரை குத்தியுள்ளார். இப்ராஹிம் லிபியா என்றும் அழைக்கப்பட்ட அவர் பாஸ் ஆதரவாளர்களினால் பெரிதும் போற்றப்பட்டவர் ஆவார்.
அன்வார் இப்ராஹிம் கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் அது நிகழ்ந்தது என கல்வித் துணை அமைச்சர் முகமட் புவாட் ஸார்க்காச்ஷி கூறினார்.
1985ம் ஆண்டு கெடா பாலிங்கிற்கு அருகில் உள்ள மெமாலியில் மதராஸா (இஸ்லாமிய சமயப் பள்ளிக் கூடம்) ஒன்றை போலீசார் முற்றுகையிட்ட போது சர்ச்சைக்குரிய சூழ்நிலைகளில் இப்ராஹிம் லிபியாவும் அவருடைய 13 ஆதரவாளர்களும் கொல்லப்பட்டனர்.
“அமெரிக்காவில் நான் படித்துக் கொண்டிருந்த போது மெமாலி குறித்து நடத்தப்பட்ட கருத்தாய்வு ஒன்றுக்கு நான் தலைமை தாங்கினேன். அன்வார் அப்போது கல்வி அமைச்சராக இருந்தார்.”
“குழப்பத்தையும் அரசியல் பதற்ற நிலையையும் ஏற்படுத்தக் கூடிய நிலைமையை இப்ராஹிம் லிபியா உருவாக்கியதாக அன்வார் சொன்னார்”, என புவாட் குறிப்பிட்டார்.”வரலாறு மீண்டும் எழுதப்பட வேண்டுமா ?” என்னும் தலைப்பில் நேற்று நிகழ்ந்த அந்த கருத்தாய்வுக் கூட்டத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு புவாட் பதில் அளித்தார்.
அந்தக் கூட்டத்துக்கு மலாய் மொழி நாளேடான சினார் ஹரியான் ஏற்பாடு செய்திருந்தது.
பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன், வரலாற்று ஆசிரியர் ராம்லா அடாம், மலாயாப் பல்கலைக்கழக இலக்கிய சமூக அறிவியல் பிரிவின் தலைவர் முகமட் அபு பாக்கார் ஆகியோரும் அந்தக் கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசினார்கள்.
பாஸ் ஆதரவாளர்களிடையே அன்வார் மீது சந்தேகத்தை ஏற்படுத்துவதே புவாட் கருத்துக்களின் நோக்கம் என கருதப்பட்டது. ஆனால் தமக்கு அது குறித்து எதுவும் தெரியாது என சைபுடின் சொன்னார்.
இப்போது சுட்டிக் காட்டுவதில் எந்தப் பயனும் இல்லை
அந்த மெமாலி சம்பவம் வரலாற்று நிகழ்வாகும். அது குறித்து மறு ஆய்வு செய்வது அவசியம் என்று சைபுடின் சொன்னார். அவர் அம்னோ காலம் தொடக்கம் அன்வாருக்கு மிகவும் விசுவாசமான ஆதரவாளர் ஆவார்.
என்றாலும் அந்த விவகாரம் நீதிமன்றத்துக்கு வெளியில் தீர்க்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடும் கொடுக்கப்பட்டு விட்டதால் அது போன்ற துயரச் சம்பவங்கள் மீண்டும் நிகழாது இருப்பதை உறுதி செய்வதே முக்கியம் என்றும் சைபுடின் குறிப்பிட்டார்.
“சுட்டிக் காட்டும் சொற்களில் சிக்கிக் கொள்ள நாங்கள் விரும்பவில்லை. ஒவ்வொரு விஷயமும் சரி பார்க்கப்பட வேண்டும். அது துயரமான நிகழ்வாகும். குற்றம் கண்டு பிடிப்பது அரசியல் அல்ல.”
தேசியப் பாதுகாப்புக்கு மருட்டல் என அறிவிக்கப்பட்ட இப்ராஹிமும் அவரது 35 ஆதரவாளர்களும் கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக மதராஸா ஒன்றுக்குள் நுழைந்த பின்னர் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸ்காரர்கள் மெமாலி கிராமத்தில் முற்றுகையிட்டனர்.
இப்ராஹிம் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழும் தேடப்பட்டு வந்தார்.
இப்ராஹிம் ஆதரவாளர்கள் சுடும் ஆயுதங்கள், பாராங்கத்திகள், மூங்கில் ஈட்டிகள் ஆகியவற்றைக் கொண்டு போலீசாரைத் தாக்கியதாகவும் அதனால் போலீசார் அந்தக் கிராமத்தின் மீது சுட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என அதிகாரத்துவ அரசாங்க அறிக்கைகள் கூறின.
அந்தச் சம்பவத்தில் நான்கு போலீஸ் அதிகாரிகளும் கொல்லப்பட்டனர். 23 போலீஸ் அதிகாரிகளும் 14 சிவிலியன்களும் காயமடைந்தனர்.