மூசா அமானின் அங்கீகார மதிப்பீடு 50விழுக்காட்டுக்குக் கீழ் குறைந்தது.

சாபா முதலமைச்சர் மூசா அமான் மீது வாக்காளரின் திருப்தி நிலை 50விழுக்காட்டுக்குக்கீழ் குறைந்தது. ஆனால், நஜிப்பின் அங்கீகார மதிப்பீடு இன்னும் உயர்வாகத்தான் உள்ளது.

மெர்டேகா கருத்துக்கணிப்பு மையம் மேற்கொண்ட ஆய்வில்,  பத்தாண்டுகளுக்குமேல் சாபா முதலமைச்சராக இருக்கும் மூசாவுக்கு வாக்காளரின் அங்கீகாரம் 2009, நவம்பரில் 60 விழுக்காடாக இருந்து 2012 செப்டம்பரில் 45 விழுக்காட்டுக்குக் குறைந்திருப்பது தெரிய வந்தது.

எல்லாத் தரப்பினரிடமும் அவருக்கு ஆதரவு குறைந்திருந்தது. என்றாலும் முஸ்லிம் பூமிபுத்ராக்களிடையேதான் அதிருப்தி அதிகம் காணப்பட்டது. அவர்களின் அங்கீகாரம் 72 விழுக்காட்டிலிருந்து 21 விழுக்காட்டுக்குக் குறைந்தது.

மூசாவின் செல்வாக்குக் குறைந்துள்ள வேளையில், மறுபுறம் நஜிப்பின் செல்வாக்கு நிலையாகவும் உயர்வாகவுமே இருந்தது.75 விழுக்காட்டினர் அவரின் செயல்பாடுகளில் திருப்தி கொண்டுள்ளனர். 2009 நவம்பரில் அது 77 விழுக்காடாக இருந்தது.

ஆனால், மாநில அரசின் மீது வாக்காளர்கள் திருப்தி கொண்டிருக்கிறார்கள் என்பதை ஆய்வு காட்டியது. அதற்கான அங்கீகாரம் 56 விழுக்காடு.  2009 நவம்பரில் 62 விழுக்காடாக இருந்த நிலையுடன் ஒப்பிட்டால் இது ஆறு விழுக்காடு குறைவு.

சாபாவில் வாக்காளர்களின் மன நிலையை அளவிட மெர்டேகா கருத்துக்கணிப்பு மையம் செப்டம்பர் 6-க்கும் 1-க்குமிடையில்  ஆய்வு மேற்கொண்டது.

வாக்காளர்களாக பதிவு செய்துகொண்டுள்ள 829-பேரிடையே அந்தக் கருத்துக்கணிப்பு செய்யப்பட்டது.