நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்க பிரஞ்சு வழக்குரைஞர் போர்டோன் இணக்கம்

ஸ்கார்ப்பின் வழக்கு தொடர்பில் மலேசியா நாடாளுமன்றத்துக்கு விளக்கமளிக்க அந்த விவகாரத்தில் சுவாராமைப் பிரதிநிதிக்கும் பிரஞ்சு வழக்குரைஞர் வில்லியம் போர்டோன் தயாராக இருக்கிறார்.

ஆனால் அவர் இங்கு வரும் போது அவரது பாதுகாப்புக்கு அம்னோவும் பாரிசான் நேசனல் அரசாங்கமும்  உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் இன்று பாரிஸில் போர்டோனைச் சந்தித்த போது அந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களுடைய சந்திப்பு விவரம் அன்வாருடைய முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மலேசிய நாடாளுமன்றத்துக்கு விளக்கமளிக்க வருமாறு சுவாராம், டிசிஎன்எஸ் வழக்குரைஞர்களுக்கு அழைப்பு விடுப்பதற்காக அண்மையில் அன்வார் பிரான்ஸுக்குச் சென்றதாக செய்திகள் வெளியாயின.

கடந்த ஆண்டு சுவாராம் நடத்திய நிதி திரட்டும் விருந்தில் கலந்து கொள்வதற்காக போர்டோன் மலேசியாவுக்கு வந்திருந்தார். ஆனால் அவர் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

பிரான்ஸில் நிகழும் ஸ்கார்ப்பின் வழக்கு பற்றி மலேசிய நாடாளுமன்றத்துக்கு விளக்கமளிக்க மூன்று அந்நிய வழக்குரைஞர்களை நாடியிருப்பது தொடர்பில் அன்வார் இப்ராஹிமையும் மற்ற மூன்று பக்காத்தான் ராக்யாட் எம்பி-க்களையும் விசாரிக்குமாறு கேட்டுக் கொள்ளும் புகார் ஒன்றை பிஎன் ஆதரவு அரசு சாரா அமைப்புக்கள் இன்று டாங் வாங்கி போலீஸ் மாவட்டத் தலைமையகத்தில் சமர்பித்துள்ளன.

அந்த வழக்கை கையாளுவதில் அன்வார் இப்ராஹிம், சுவாராம் ஆகிய தரப்புக்களின் நோக்கம் என்ன என்று இளம் மலேசியப் பத்திரிக்கையாளர் மன்றத் தலைவர் சுல்கர்னயின் தாயிப் கேள்வி எழுப்பினார். ஸ்கார்ப்பின் நீர்மூழ்கிப் பேரத்தில் சுவாராமுக்கு ஏன் அக்கறை ? அதற்கு என்ன ஈடுபாடு உள்ளது ? அந்தப் பேரத்தின் மூலம் அதற்கு இழப்பு ஏதும் ஏற்பட்டதா ?”

அதனால் உள்துறை அமைச்சு அந்த விஷயத்தை கூடிய விரைவில் புலனாய்வு செய்ய வேண்டும் என்றார் அவர்.

அந்த வழக்கு குறித்து எம்பி-க்களுக்கு விளக்கமளிக்குமாறு சுவாராம் வழக்குரைஞர்களான வில்லியம் போர்டோன், ஜோசப் பிரெஹாம் ஆகியோரையும் டிசிஎன்எஸ் வழக்குரைஞரான ஆலிவியர் மெட்செனர் ஆகியோரை அன்வார் அழைத்துள்ளதாக இரண்டு நாட்களுக்கு முன்பு பக்காத்தான் ராக்யாட் எம்பி-க்கள் அறிவித்தனர்.

பிகேஆர் சுபாங் எம்பி ஆர் சிவராசா, பிகேஆர் பத்து எம்பி தியான் சுவா, பாஸ் பொக்கோக் செனா எம்பி மாஹ்புஸ் ஒமார் ஆகியோரே அந்த எம்பி-க்கள் ஆவர்.

கடந்த ஜுலை மாதம் போர்டோன் தமது சமூக வருகை அனுமதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்பட்ட பின்னர் மலேசிய அதிகாரிகள் அவரை நாட்டிலிருந்து வெளியேற்றினர்.

சுவாராம் வழக்குரைஞர்கள் என்ற முறையில் இருவரும் மலேசியாவுக்கு வந்து வேலை செய்வதற்குஅனுமதி கோரி சமர்பிக்கப்பட்ட விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டது.