கடந்த வார இறுதியில் நடைபெற்ற முதலமைச்சர் முகமட் அலி ரூஸ்தாமின் புதல்வர் திருமணம் தொடர்பான விசாரணைகளில் உதவுவதற்காக எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மலாக்கா மாநில மேம்பாட்டுக் கழக தலைமை நிர்வாக அதிகாரியிடமிருந்து இன்று வாக்குமூலத்தைப் பதிவு செய்தது.
அந்தத் தகவலை அந்தத் தலைமை நிர்வாக அதிகாரியான யூசோப் ஜந்தான் உறுதிப்படுத்தினார்.
“நான் இன்று காலை எம்ஏசிசி-யை சந்தித்தேன்,” என மலேசியாகினி தொடர்பு கொண்ட போது கூறினார்.
அந்தத் திருமணத்துக்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கு உதவி செய்ய மலாக்கா மாநில மேம்பாட்டுக் கழகம் நடத்திய கூட்டம் ஒன்றுக்கு யூசோப் தலைமை தாங்கியதாக கடந்த புதன் கிழமை நாடாளுமன்றத்தில் பொக்கோக் செனா எம்பி மாஹ்புஸ் ஒமார் தகவல் வெளியிட்டார். முதலமைச்சருக்கு எந்த பில்லும் அனுப்பப்படக் கூடாது என்றும் அந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.
அந்தத் திருமணத்துக்கு ஏறத்தாழ 600,000 ரிங்கிட் செலவானதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதில் 130,000 பேர் கலந்து கொண்டனர். அதனால் அந்த நிகழ்வு மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
மலாக்கா பிகேஆர் இளைஞர் தலைவர் சம்சுல் இஸ்காண்டார் முகமட் அக்கின், மாநில எதிர்த்தரப்புத் தலைவர் கோ லியோங் சான், மலாக்கா பாஸ் துணை ஆணையர் II கமாருதின் சிடெக் ஆகியோர் மாநில எம்ஏசிசி அலுவலகத்தில் புகார் செய்தனர்.