பினாங்கு பிஎன்: 30 நாள் அவகாசம் பாரபட்சமானது

தாமான் மாங்கிஸ் நிலத்துக்கு 30 நாட்களுக்குள் பாக்கித் தொகையைக் கட்டுமாறு மாநில அரசாங்கம் நிபந்தனை விதித்துள்ளது பாரபட்சமானது என பினாங்கு பிஎன் கூறுகிறது.

காரணம் இன்னொரு நில விற்பனையில் ஐந்து ஆண்டுகளில் பாக்கிப் பணத்தை செலுத்துவதற்கு தனியார் நிறுவன்ம் ஒன்று அனுமதிக்கப்பட்டுள்ளது என மாநில அம்னோ இளைஞர் தலைவர் ஷேக் ஹுசேன் மைதின் கூறினார்.

அந்தக் கடுமையான நிபந்தனை பொது வீடமைப்புக்கு அந்த நிலத்தை விற்கும் எண்ணம் முதலமைச்சர் லிம் குவான் எங்-கிற்கு இல்லை என்பதையும் அந்த நிலத்தை தனியார் மருத்துவமனைக்குப் பயன்படுத்தப்படுவதையே இன்னும் அவர் விரும்புகிறார் என்பதையும் காட்டுவதாக அவர் சொன்னார்.

அந்த நிலத்தை மருத்துவ மய்யமாக மேம்படுத்துவதற்கான முயற்சியில் வெற்றி பெற்ற Kuala Lumpur International Dental Centre- என்னும் நிறுவனத்திடமிருந்து லிம் ‘லஞ்சம் பெற்றுள்ளதாக’ கூறி லிம் மீது ஷேக் ஹுசேன் ஊழல் குற்றச்சாட்டை  சுமத்தினார்.

“பணத்தை கொடுப்பதற்கு எங்களுக்கு இவ்வளவு குறுகிய காலத்தை விதித்துள்ள அவரது நோக்கம் என்ன ? எந்தப் பரிவர்த்தனையிலும் வழக்கமாக முதலில் ஒரு விழுக்காடு கொடுக்கப்படும். அடுத்து எஞ்சியுள்ள 9 விழுக்காடு கொடுக்கப்படும். எஞ்சிய தொகை குறிப்பிடப்பட்ட காலத்திற்குள் செலுத்தப்பட வேண்டும்,” அவர் இன்று நிருபர்களிடம் தெரிவித்தார்.

பாயான் முத்தியாராவில் பினாங்கு மாநில மேம்பாட்டுக் கழகத்துக்குச் சொந்தமான நிலம் ஒன்று தனியார் மேம்பாட்டு நிறுவனம் ஒன்றுக்கு விற்கப்பட்ட போது ஐந்து ஆண்டுகளில் பணத்தை செலுத்துவதற்கு அனுமதிக்கப்பட்டது என தொழில் ரீதியில் பொறியியலாளருமான ஷேக் ஹுசேன் குறிப்பிட்டார்.

“அது தனிப்பட்ட நிறுவனம். அதற்கு ஐந்து ஆண்டுகள் கொடுக்கப்பட்டன. நாங்கள் பொது வீடமைப்புத் திட்டத்தை மேற்கொள்ள விரும்புகிறோம். நாங்கள் 30 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. அது லிம் குடும்ப நிலம் அல்ல. அது லிம் கிட் சியாங்-கிற்கு சொந்தமானது அல்ல. அது மாநில அரசாங்கத்துக்குச் சொந்தமானது,” என்றார் அவர்.

பொது வீடமைப்பு திட்டங்களை மேற்கொள்வதற்கு அந்த நிலத்தை விற்க விரும்பவில்லை என லிம் ஏற்கனவே ஒப்புக் கொண்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். நாங்களும் அந்த விவகாரம் முடிந்து விட்டதாக கருதியிருப்போம் என ஷேக் ஹுசேன் புன்னகையுடன் கூறினார்.