புதிய தேசியக் கல்விப் பெருந்திட்டம் குறித்து ஏமாற்றம் அடைந்துள்ள மூத்த சீனக் கல்வியாளர் ஒருவர், தென் தாய்லாந்தில் நிகழும் பிரிவினைவாதப் பூசலிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளுமாறு பிஎன் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
தாய்மொழிக் கல்வியை அரசாங்கம் ஒடுக்க விரும்புவதை பெருந்திட்டத்தில் காணப்படும் பரிந்துரைகள் உணர்த்துவதாக எல்எல்ஜி பண்பாடு மேம்பாட்டு மய்ய உதவித் தலைவர் கோ கியான் செங் கூறினார்.
எடுத்துக்காட்டுக்கு ரிமூவ் வகுப்புக்களை இடைநிலைப்பள்ளிகளிலிருந்து அகற்றும் யோசனை தாய்மொழியை மாணவர்கள் கற்பதை ஊக்குவிப்பதில்லை என்னும் நோக்கத்தைக் கொண்டிருப்பதாக அவர் சொன்னார்.
“உண்மையில் எந்த ஒரு பல இன சூழ்நிலையிலும் பல வகையான மொழிகள், பண்பாடுகள், பண்புகள் காணப்படுகின்றன. இனங்கள் ஒன்றுக்கொன்று மரியாதை கொடுத்து சகித்துக் கொள்ள வேண்டும். ஒன்றையொன்று அழிக்க முயலுவது மனுக்குல நேயத்திற்கு எதிரானதாகும்,” என்றார் அவர்.
தென் தாய்லாந்தில் நிகழும் பிரிவினைவாதப் பூசல் மலேசிய அரசாங்கத்துக்கு ஒரு பாடமாக இருக்க முடியும் என அவர் மேலும் சொன்னார்.
“மலாய் அல்லாத இனங்களுக்கு பிஎன் அரசாங்கம் செய்வதையே தென் தாய்லாந்தில் தாய்லாந்து அரசாங்கம் மலாய்க்காரர்களுக்குச் செய்தது.”
“தென் தாய்லாந்தில் உள்ள மலாய்க்காரர்களில் சிலர் இப்போது மலாய் மொழியைக் கூட பேச முடியவில்லை. அதற்கு என்ன காரணம் ?” என்று அவர் வினவினார்.
கல்விப் பெருந்திட்டம் ஏமாற்றத்தைத் தருகின்றது
2012-2015 வரைக்குமான மலேசியக் கல்விப் பெருந்திட்டம் மீது ஏமாற்றம் அடைந்துள்ள ஐந்து அரசு சாரா சீன அமைப்புக்களுடன் இணைந்து நடத்திய நிருபர்கள் கூட்டத்தில் அவர் பேசினார்.
எல்எல்ஜி பண்பாடு மேம்பாட்டு மய்யம், கோலாலம்பூர் சிலாங்கூர் சீனர் அசெம்பிளி மண்டபம்,மலேசிய சீன ஆய்வியல் மய்யம், மலேசிய ஐக்கிய சீனப் பள்ளி முன்னாள் மாணவர் சங்கம், சீனாவில் உள்ள பல்கலைக்கழகங்களின் முன்னாள் மாணவர் சங்கம் ஆகியவை அந்த ஐந்து அமைப்புக்களாகும்.
அந்தக் கல்வி பெருந்திட்டம் தொடர்பாக ஏழு அம்சங்களை அவை தங்கள் கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளன
1. மலேசியா பல இன, பல பண்பாட்டு நாடு என்ற உண்மையை ஏற்றுக் கொண்டு வெவ்வேறு இனங்களைக் கொண்ட பல்வகைத்தன்மைக்கு மதிப்புக் கொடுங்கள்
2. மொழியைக் கற்பதில் குறிக்கோளும் நடைமுறைக்கு ஏற்ற சிந்தனைகளும் இருக்க வேண்டும்.
3. இடைநிலைப் பள்ளிக்கூடங்களில் ரிமூவ் வகுப்புக்களை தக்க வைத்துக் கொண்டு மேம்படுத்த வேண்டும்
4. ஒரு பாடம் என்ற முறையில் வரலாறு திருத்தியமைக்கப்படுவது தொடர்பில் விவரங்களை விளக்கவும்.
5. கல்வித் துறைகளில் எல்லா நிலைகளிலும் பல இன ஊழியர்கள் இருப்பதை உறுதி செய்யுங்கள். கல்வியும் ஜனநாயகமாக்கப்பட வேண்டும்.
6. கல்விப் பெருந்திட்டம் சம்பந்தப்பட்ட எல்லா ஆய்வறிக்கைகளையும் புள்ளி விவரங்களையும் வெளியிடுங்கள்.
7. கொள்கைகள் நியாயமாகவும் பொறுப்புடனும் அமலாக்கப்படுவதை கண்காணிக்கவும் உறுதி செய்யவும் ஒரு குழுவை அமையுங்கள்.