பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கில் மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் தம் ஆட்களை முக்கிய அரசு அமைப்புகளில் ஊடுருவ வைத்துள்ளாராம். மலாய் நாளேடான உத்துசான் மலேசியா, இந்த அதிர்ச்சிதரும் செய்தியை இன்று வெளியிட்டிருக்கிறது.
‘உள்ளுக்குள் உறைந்துள்ள எதிரிகள்’ நஜிப்பின் வெளிநாட்டுப் பயணங்கள், அவரின் தனிப்பட்ட விடுமுறைகள் பற்றிய தகவல்கள் உள்பட அவரைப் பற்றிய இரகசிய தகவல்களை எல்லாம் மாற்றரசுக்கட்சிக்கு தெரிவிக்கின்றனர் என்று அந்த மலாய் ஏடு கூறியுள்ளது.
ஆனால், சம்பந்தப்பட்ட அரசு அமைப்புகளை அது பெயர் குறிப்பிடவில்லை.
இன்று அந்த ஏட்டில் Musang berbulu ayam dalam badan-badan strategik kerajaan? (முக்கிய அரசு அமைப்புகளில் பசுந்தோல் போர்த்திய புலிகளா?) என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருந்த ஒரு கட்டுரையில், மூத்த செய்தி ஆசிரியர் சைனி ஹசான், இவ்விவகாரத்தில் நம்பத்தகுந்த தகவல் தமக்குக் கிடைத்திருப்பதாகக் கூறினார்.
“அரசின் முக்கிய அமைப்பு ஒன்றில்(மற்ற அமைப்புகளிலும் இருக்கலாம்) அன்வாரின் ஆள்கள் ஊடுருவி வருவதாக நம்பத்தக்க வட்டாரத்திலிருந்து எனக்குத் தகவல் கிடைத்துள்ளது”, என்று தம் பத்தியான சியுட்டில் (Cuit) அவர் தெரிவித்துள்ளார்.
“இதைப் பற்றி நிறைய எடுத்துக்காட்டுகளைக் காண்பிக்க விரும்பவில்லை. அரசுக்கொள்கைகளைத் தற்காக்கும் பொறுப்பைக் கொண்ட அமைப்புகள், அரசுக் கொள்கைகளை மக்களுக்கு விளக்கிக்கூறி பிரதமருக்கு அவர்களின் ஆதரவைத் திரட்டித்தரும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள அமைப்புகள் பிரதமருக்கே குழிபறிக்கும் வேலையைச் செய்வதை நீங்களே கண்டுகொள்ள முடியும்”, என்று தமக்குத் தகவல் தெரிவித்த வட்டாரத்தை மேற்கோள் காட்டி சைனி கூறினார்.
தம் ஆள்களை அரசு அமைப்புகளில் ஊடுருவச் செய்வதில் அன்வார் வெற்றிபெற்றுள்ளார் என்று அவ்வட்டாரம் கூறிற்று.
“சிறிய அதிகாரிகளான நாங்கள், (லீபியத் தலைவர்) கடாபிக்கு நேர்ந்த நிலை நம் பிரதமருக்கு நேர்வதைக் காண விரும்பவில்லை.
“கடாபி வலிமை படைத்தவர்தான் ஆனாலும் வெளியில் உள்ள இஸ்லாத்துக்குப் பகைவர்களின் உதவிகொண்டு உள்ளுக்குள் இருந்த எதிரிகள் அவரைக் கவிழ்த்துவிட்டனர்”.
நஜிப்பின் அதிகாரப்பூர்வ வெளிநாட்டுப் பயணத்துக்கு ஆன செலவுகள் பற்றியும் அவர் தனிப்பட்டமுறையில் விடுமுறையைக் கழிக்க வெளிநாட்டுக்கு மேற்கொண்ட பயணம் பற்றியும் மாற்றரசுக் கட்சியினர் விவரமாக தெரிந்து வைத்திருந்ததை சுட்டிக்காட்டிய அந்த வட்டாரம் இது, அந்த ஊடுருவல்காரர்களின் வேலைதான் என்று கூறியது.
“உள்ளுக்குள் ஆள் இல்லையென்றால் அவர்களுக்கு அவ்வளவு விரைவில் அந்தத் தகவல்கள் எப்படிக் கிடைத்திருக்கும்?”, என்றும் அவ்வட்டாரம் வினவியது.
ஆனால், அந்த வட்டாரத்தின் கூற்றைத் தம்மால் உறுதிப்படுத்திக்கொள்ள முடியவில்லை என்பதை சைனி வலியுறுத்தியிருந்தார்.
“அது பொய்யாக இருந்தால், அப்படியெல்லாம் ஒன்றும் நடக்கவில்லை என்று நிம்மதியாக உறங்குவேன், இருந்தாலும் நடக்காத ஒன்றை நடந்தததாகச் சொன்னேன் என்று என்மேல் குறை சொல்வார்கள்.அது, பரவாயில்லை.
“நான் சொல்வது உங்களை ஆச்சரியப்பட வைக்கலாம். இது உண்மையா பொய்யா என்பதைக் கண்டறியும் பொறுப்பை உரிய அதிகாரிகளிடமே விட்டு விடுகிறேன்”.
அது உண்மையாக இருக்குமானால், அந்தக் கீழறுப்புச் சக்திகளை ஒழித்துக்கட்ட வேண்டும் என்றவர் கேட்டுக்கொண்டார்.
அவர்களை விட்டு வைப்பது அரசாங்கத்துக்கே ஆபத்தாக முடிந்துவிடும்.