பொருளாதாரத்திலும் மற்ற துறைகளிலும் பினாங்கு பூமிபுத்ராக்களுடைய பங்கேற்பை அதிகரிப்பதற்கு பொதுத் தேர்தலுக்கு முன்னதாக கூட்டரசு அரசாங்கம் என்றுமில்லாத அளவுக்கு பெரிய ஒதுக்கீட்டை வழங்கியுள்ளது.
அடுத்த ஆண்டு பிரதமர் துறைக்கான பட்ஜெட்டில் ‘பினாங்கு பூமிபுத்ரா பங்கேற்பு’ திட்டங்களுக்கு மொத்தம் 120 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.
அது இவ்வாண்டுக்கான 82.5 மில்லியன் ரிங்கிட்டுடன் ஒப்பிடுகையில் 45.5 விழுக்காடு அதிகமாகும்.
2011ம் ஆண்டு அந்த ஒதுக்கீடு முதலில் வழங்கப்பட்ட போது இருந்ததை விட மும்மடங்கு கூடுதலாகும்.
2010ம் ஆண்டு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தமது முதலாவது வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்த போது பினாங்கிற்காக சிறப்பாக அறிமுகம் செய்யப்பட்ட அந்தத் திட்டத்துக்கு 2011ம் ஆண்டுக்கு 45 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டது.
அந்த ஒதுக்கீடு 1977ம் ஆண்டு அமைக்கப்பட்ட பினாங்கு பூமிபுத்ரா பங்கேற்பு ஒருங்கிணைப்புப் பிரிவுக்கு வழங்கப்படும் ஒதுக்கீடுகளுக்கு அப்பாற்பட்டதாகும்.
“வியூகத் துறையிலும் மனித மேம்பாட்டிலும் பூமிபுத்ராக்களின் பங்கேற்பையும் நிலையையும் மேம்படுத்துவதற்கான திட்டங்களை வகுப்பது” உட்பட பல பணிகள் அந்தப் பிரிவின் இணையத் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
பிரதமர் துறையில் இயங்கும் அமலாக்க ஒருங்கிணைப்புப் பிரிவின் கீழ் அந்தப் பிரிவு வைக்கப்பட்டுள்ளது.
முக்கியமான வாக்குக் களஞ்சியம்
பினாங்கு மாநிலத்தில் முக்கியமான வாக்குக் களஞ்சியமாகத் திகழும் மாநில மலாய்க்காரர்களை பக்காத்தான் வழி நடத்தும் மாநில அரசாங்கம் புறக்கணிப்பதாக பிஎன் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றது.
பக்காத்தான் அதனை குறிப்பாக டிஏபி வன்மையாக மறுத்துள்ளது. அந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு புள்ளி விவரங்களுடன் அது பதிலும் அளித்துள்ளது.
பினாங்கு சட்டமன்றத்தில் உள்ள 40 இடங்களில் 11, பிஎன் வசம் உள்ளது. அவை அனைத்தும் மலாய் பெரும்பான்மை தொகுதிகளாகும். அந்த மாநிலத்தில் 15 மலாய் பெரும்பான்மை தொகுதிகள் உள்ளன.
அந்த 11 இடங்களையும்- அம்னோ வென்றவை- தக்க வைத்துக் கொள்வது அடுத்த பொதுத் தேர்தலில் பினாங்கை மீண்டும் கைப்பற்றுவதற்கு முக்கியம் என அம்னோ உதவித் தலைவர் அகமட் ஸாஹிட் ஹமிடி கூறியுள்ளார்.
அவர் 3-3-3-1 என்னும் வழிமுறையையும் தெரிவித்துள்ளார். நடப்புத் தொகுதிகளுடன் அம்னோ. மசீச, கெரக்கான் ஆகியவை தலா மூன்று இடங்களையும் மஇகா ஒர் இடத்தையும் வெல்வது அந்த மாநிலத்தை பிஎன் மீண்டும் கைப்பற்ற உதவும் என அவர் நம்புகிறார்.