குடும்ப வருமானம்: சபா பூமிபுத்ராக்கள் நாட்டின் மற்றவர்களை விட பின் தங்கியுள்ளனர்

சபாவில் பூமிபுத்ரா குடும்ப வருமானம் மாதம் ஒன்றுக்குச் சராசரி 2800 ரிங்கிட் ஆகும். அது நாடு முழுவதும் உள்ள பூமிபுத்ராக்களின் சராசரி மாத வருமானமான 3,624 ரிங்கிட், நாட்டின் சராசரி குடும்ப வருமானமான 4,025 ரிங்கிட்-உடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகும்.

விழுக்காடு அடிப்படையில் பார்த்தால் எல்லா பூமிபுத்ராக்களைக் காட்டிலும் 23 விழுக்காடும் எல்லா மலேசியர்களையும் விட 30 விழுக்காடும் குறைவாகும்.

பூமிபுத்ரா குடும்ப வருமானம் தீவகற்பத்தில் 3,784 ரிங்கிட்-ஆகவும் சரவாக்கில் 3,217 ரிங்கிட்-ஆகவும் இருந்து வருகின்றது.

2009ம் ஆண்டு புள்ளி விவரத் துறை மேற்கொண்ட குடும்ப வருமான ஆய்வு மூலம் அந்தத் தகவல் பெறப்பட்டுள்ளது. மக்களவையில் கடந்த வாரம் டிஏபி செர்டாங் எம்பி தியோ நீ சிங் -கிற்கு அனுப்பப்பட்ட எழுத்துப்பூர்வமான பதிலில் அது தெரிவிக்கப்பட்டது.

ஐந்து ஆண்டுகளில் இரண்டு முறை அந்த ஆய்வு நடத்தப்படுகின்றது. கடைசியாக 2009ல் அது மேற்கொள்ளப்பட்டது.

2009ம் ஆண்டுக்கான குடும்ப வருமான, அடிப்படை வசதிகள் ஆய்வறிக்கையில் அந்த ஆய்வு முடிவுகள் இவ்வாண்டு ஜுன் மாதம் வெளியிடப்பட்டது.

தீவகற்பத்தில் உள்ள பூம்பிபுத்ராக்களுக்கும் சபா, சரவாக் பூமிபுத்ராக்களுக்கும் தனித்தனியான புள்ளி விவரங்கள் அதில் இல்லை. அவை ஒரே பிரிவாக இணைக்கப்பட்டிருந்தன. அதனைத் தொடர்ந்து கூடுதல் புள்ளி விவரங்களை தியோ மக்களவையில் கோரியிருந்தார்.

அந்த ஆய்வு இவ்வாண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மக்களவைப் பதிலில் கூறப்பட்டுள்ளது.