மலாக்கா முதலமைச்சர் புதல்வர் திருமண விருந்து 2.0ல் பிரதமர் கலந்து கொண்டார்

மலாக்கா முதலமச்சர் முகமட் அலி ரூஸ்தாம் தமது மூத்த புதல்வர் திருமணத்தை ஒட்டி நேற்று நடத்திய இரண்டாவது விருந்தில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், பல அமைச்சர்கள் உட்பட 900 பெருமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

130,000 விருந்தினர்களுடன் நடத்தப்பட்டு மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்ற முதலாவது விருந்துடன் ஒப்பிடுகையில் இது அதிக ஆடம்பரம் இல்லாமல் நடத்தப்பட்டது.  என்றாலும் ஐந்து நட்சத்திர ராயல் சூலான் ஹோட்டலில் நடந்த அந்த விருந்தில் கவர்ச்சிக்குக் குறைவில்லை.

இளம் சிவப்பு நிற உடையை அணிந்திருந்த முகமட் அலி விருந்தினர் பட்டியலை வாசிக்க சில நிமிடங்கள் எடுத்துக் கொண்டார். அப்போது அவருடன் மனைவியுடனும் இரண்டு இளைய பிள்ளைகளும் இருந்தனர்.

பாகாங் சுல்தான் அகமட் ஷா, பெர்லிஸ் அரச குடும்பத்தினர், பிரதமர் நஜிப், அவரது துணைவியார், துணைப் பிரதமர் முஹைடின் யாசின், அவரது மனைவி, முன்னாள் பிரதமர்களான டாக்டர் மகாதீர் முகமட், அப்துல்லா அகமட் படாவி ஆகியோர் விருந்தினர்களில் அடங்குவர்.

மலாக்கா, சரவாக் கவர்னர்களும் இந்தோனிசியா, பிலிப்பீன்ஸ், சிங்கப்பூர், இலங்கை ஆகியவற்றைச் சேர்ந்த பெருமக்களும் அங்கு இருந்தனர்.

அரசாங்கத் தலைமைச் செயலாளர் அலி ஹம்சா, முன்னாள் உள்துறை அமைச்சர் சையட் ஹமிட் அல்பார், பேராக் மந்திரி புசார் ஸாம்ரி அப்துல் காதிர், ஜோகூர் மந்திரி புசார் அப்துல் கனி ஒஸ்மான் ஆகியோரும் அங்கு காணப்பட்டனர்.

கட்டணம் இல்லாத தொலைக்காட்சி நிலையங்கள் அனைத்துக்கும் சொந்தமான மீடியா பிரிமா, பெரித்தா ஹரியான், உத்துசான் மலேசியா ஆகியவற்றின் தலைமை நிர்வாகிகள் ஆகியோரும் விருந்தினர் பட்டியலில் காணப்பட்டனர்.

அந்த விருந்து நிகழ்வில் மலாக்கா உணர்வு மேலோங்கியிருந்தது. விருந்து மண்டபத்தின் நுழைவாயிலில் நன்கு அலங்கரிக்கப்பட்ட பல ரிக்சாக்கள் வைக்கப்பட்டிருந்தன.

அவற்றை மலாக்கா மாநகராட்சி மன்ற டிரக்குகள் ஹோட்டலுக்குக் கொண்டு வந்தன. கார் நிறுத்துமிடத்தில் யாயாசான் மலாக்கா, மலாக்கா முதலமைச்சர் துறை ஆகியவற்றின் பஸ்களும் காணப்பட்டன.

முகமட் அலி தமது உரையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மலாக்கா விருந்து பற்றி மறைமுகமாக குறிப்பிட்டார்.

“பெற்றோரது வாழ்க்கையில் தங்கள் பிள்ளையின் திருமணம் அதுவும் மூத்த பிள்ளையின் திருமணம் மிகவும் மகிழ்ச்சியான நேரமாகும். நான் இதற்காக சில காலம் காத்திருந்தேன். சில கட்சிகள் உட்பட பலருடைய கவனத்தை அந்தத் திருமணம் ஈர்த்து விட்டது,” என அவர் சொன்னார்.

தனிப்பட்ட திருமணம் ஒன்றுக்கு மாநில அரசு நிறுவனங்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுவது மீது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

சர்ச்சைக்குரிய அம்னோ தலைவரான முகமட் அலி 2004ம் ஆண்டு தொடக்கம் 2009ம் ஆண்டு வரை அம்னோ உதவித் தலைவராக இருந்தார். அவர் 2009ம் ஆண்டு துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட முயன்றார். வாக்குகளை வாங்கிய குற்றச்சாட்டின் பேரில் அவர் குற்றவாளி எனக் கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து போட்டியிடும் தகுதியை இழந்தார்.