எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் ஆதரவு, அனுதாபம் அல்லது எதிர்ப்பு காட்டுவதாக கருதப்படும் எந்த நடவடிக்கையிலும் மாணவர்கள் ஈடுபடுவதை தடுக்கும், பல்கலைக்கழக, பல்கலைக்கழகக் கல்லூரிச் சட்டத்தின் 15வது பிரிவை ரத்துச் செய்யுமாறு அம்னோ இளைஞர் பிரிவு இன்று அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டது.
கடந்த ஆண்டு பல்கலைக்கழக மாணவர்களிடையே அம்னோ இளைஞர்கள் நடத்திய ஆய்வைத் தொடர்ந்து இந்த வேண்டுகோள் விடுக்கப்படுவதாக அதன் தலைவர் கைரி ஜமாலுதின் சொன்னார்.
“மாணவர்கள் நேரடியாக அரசியலில் சம்பந்தப்படுவதற்கு வாய்ப்புக்களை வழங்கும் பொருட்டு பல்கலைக்கழக, பல்கலைக்கழகக் கல்லூரிச் சட்டத்தின் 15வது பிரிவை அரசாங்கம் ஆய்வு செய்யும் என நாங்கள் நம்புகிறோம்,” என அவர் நிருபர்களிடம் கூறினார்.
ஷா அலாமில் நேற்று அம்னோ இளைஞர் பிரிவு நிர்வாக மன்றக் கூட்டத்துக்குப் பின்னர் அவர் நிருபர்களைச் சந்தித்தார்.
அந்த நடவடிக்கை, இசா என்ற உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தை ரத்துச் செய்வது என்ற அரசாங்க முடிவுக்கு ஏற்பவும் அமையும் என அவர் கருதுகிறார்.
இதனிடையே அம்னோ இளைஞர் பிரிவு அனைத்து மாநிலங்களிலும் தனது நிர்வாக மன்றக் கூட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளதாகவும் கைரி தகவல் வெளியிட்டார்.
முதல் கூட்டம் சிலாங்கூரில் நடந்துள்ளது என்றும் கட்சி எந்திரத்தை வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக அவை அமையும் என்றும் அவர் சொன்னார்.
கம்யூனிஸ்ட்கள் இந்த நாட்டின் சுதந்திரத்துக்கு உண்மையாக போராடியவர்கள் என பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு கூறிக் கொண்டதால் எழுந்துள்ள பிரச்னை மீது அம்னோ இளைஞர் பிரிவு தகவல் விளக்கக் கூட்டங்களை நடத்தும் என்றும் கைரி அறிவித்தார்.
முதலாவது கூட்டம் ஜோகூர் புக்கிட் கெப்போங்கில் அக்டோபர் 29ம் தேதி நிகழும். அதற்கு முன்னாள் வீரர் சங்கங்கள் ஒத்துழைப்பு அளிக்கும்.