மலேசிய பத்திரிகையாளர் கழகத் தலைவர் சாமில் வாரியாவும், உத்துசான் மலேசியாவும், 2008 அக்டோபர் 12-இல் அம்னோவுக்குச் சொந்தமான அந்த நாளேட்டில் ‘Politik Baru YBJ’ (மாண்புமிகுவின் புதிய அரசியல்) என்ற தலைப்பில் சீபூத்தே எம்பி தெரேசா கொக்கை அவமதிக்கும் வகையில் ஒரு கட்டுரை வெளியிடப்பட்டதற்கு மன்னிப்பு கேட்டனர்.
இன்று உயர் நீதிமன்றத்தில் சாமிலின் மன்னிப்பு அறிக்கையை வாசித்த அவரின் வழக்குரைஞர் ஜலில் முகம்மட் மெஸ், சாமிலின் அனுமதியின்றியே அக்கட்டுரையில் திருத்தங்கள் செய்து மிங்குவான் மலேசியா வெளியிட்டிருந்தது என்றார்.
“என் கட்டுரை திருத்தப்பட்டது மட்டுமன்றி அதில் செய்யப்பட்ட திருத்தங்கள் பற்றியும் எனக்குத் தெரிவிக்கப்படவில்லை.
“ஆனால், கட்டுரையில் என் பெயரைப் பயன்படுத்தி இருந்தார்கள். அதற்குச் சன்மானம் எதுவும் கொடுக்கப்படவும் இல்லை”, என்று சாமில் (வலம்) அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்,
கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி அப்துல் ஹமிட் சுல்தான் பக்கர் முன்னிலையில் அவ்வழக்கு தீர்க்கப்பட்டது.
சாமிலிடமிருந்து செலவுத் தொகை எதனையும் தாங்கள் கோரவில்லை என தெரேசா கொக்கின் வழக்குரைஞர் சங்கரா நாயர் தெரிவித்தார்.
உத்துசான் மலேசியாதான் செலவுத்தொகையாக ரிம50,000 கொடுக்க வேண்டும் அத்துடன் மிங்குவான் மலேசியாவில் மன்னிப்பும் கேட்க வேண்டும் என்றார்.