2002ம் ஆண்டு மலேசியா இரண்டு பிரஞ்சு ஸ்கார்ப்பின் நீர்மூழ்கிகளை கொள்முதல் செய்தது தொடர்பில் பிரஞ்சு நிறுவனம் ஒன்று ஊழல் புரிந்துள்ளதாகக் கூறப்படுவது மீது வழக்கு விசாரணை நிகழ்வதாக பல மலேசிய இணையத் தள ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருப்பதை பிரபலமான பிரஞ்சு அரசாங்க வழக்குரைஞர் ஒருவர் மறுத்துள்ளார்.
மலேசிய ஊடகங்கள் உண்மைக்கும் வதந்திகளுக்கும் இடையிலான வேறுபாட்டையும் புலனய்வுகளுக்கும் வழக்கு விசாரணைக்கும் இடையிலான வேறுபாட்டையும் புரிந்து கொள்ள வேண்டும் என Yves Charpenel என்ற அந்த வழக்குரைஞர் சொன்னார்.
“அந்த விவகாரம் மீது சில மலேசிய ஊடகங்கள் ஏற்படுத்தியுள்ள குழப்பத்தை நான் அறிவேன். அது ஊடகங்கள் நடத்தும் வழக்கு விசாரணை என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை என்று தான் நான் சொல்வேன்,” என அவர் இன்று பெர்னாமாவுக்கு கோலாலம்பூரில் அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
பிரான்ஸில் வழக்கு தொடுப்பு அலுவலகத்தின் முன்னாள் தலைவரான Charpenel இப்போது அரசாங்க வழக்குரைஞராக பணி புரிகிறார். ஊழல் தடுப்பு அமைப்புக்களுக்கான அனைத்துலக சங்கத்தில் நிர்வாக உறுப்பினரான அவர் அந்தச் சங்கத்தின் நான்கு நாள் மாநாட்டிலும் பொதுக் கூட்டத்திலும் கலந்து கொள்வதற்காக கோலாலம்பூர் வந்துள்ளார். நேற்று அந்த மாநாடு நிறைவடைந்தது.
அந்த நீர்மூழ்கி பேரத்தில் மலேசிய நிறுவனம் ஒன்றுக்கு பிரஞ்சு நிறுவனம் ஒன்று லஞ்சம் கொடுத்ததாக கூறப்படுவது மீது மலேசிய மனித உரிமைப் போராட்ட அமைப்பான சுவாராம் 2009ம் ஆண்டு புகார் செய்ததைத் தொடர்ந்து சுயேச்சையான இரண்டு ‘புலனாய்வு நீதிபதிகள்’ தங்கள் ஆய்வுகளை இவ்வாண்டுத் தொடக்கத்தில் தொடங்கியதாக அவர் தகவல் வெளியிட்டார்.
சட்ட ஆளுமையைப் பின்பற்றும் மற்ற நாடுகளைப் போன்று பிரான்ஸிலும் எல்லா புலனாய்வுகளும் முழுக்க முழுக்க ரகசியமாக நடத்தப்படுகின்றன என Charpenel மேலும் தெரிவித்தார்.
புகார் செய்வதற்கு யாருக்கும் உரிமை உண்டு எனக் கூறிய அவர், புலனாய்வுகள் ரகசியமாக நடைபெறுவதால் சில தரப்புக்கள் ஊடகங்களில் புகார் செய்வதை நாடுகின்றன என்றார்.